தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை


தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு: மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை
x
தினத்தந்தி 3 Aug 2018 5:14 AM GMT (Updated: 2018-08-03T10:44:56+05:30)

அண்ணா பல்கலைகழக தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். #AnnaUniversity

சென்னை,

சென்னை அண்ணா பல்கழைகழகத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறுகூட்டலில் லஞ்சம் பெற்றுக் கொண்டு கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 565 அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடந்த பருவத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் சுமார் 3 லட்சம் பேர் மறுக் கூட்டலுக்காக விண்ணப்பித்தனர். மறுக்கூட்டலில் 73 ஆயிரம் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

இந்த முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக முன்பு பணியாற்றிய பேராசிரியை ஜி.வி.உமா உள்பட 10 ஆசிரியர்கள் மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், பேராசிரியர்கள் மத்தியிலும், இவர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் மத்தியிலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முறைகேடு தொடர்பாக 50க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக 24 மதிப்பெண் எடுத்த மாணவருக்கு மறுமதிப்பீட்டில் 94 மதிப்பெண் தரப்பட்டிருப்பதால் சந்தேகம் அடைந்ததால் இந்த புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மறுமதிப்பீட்டில் 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றது குறித்து விசாரணை  நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story