பல்கலைக்கழகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

பல்கலைக்கழகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை,
ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க பல்கலைக்கழகங்களுக்கு சென்று கவர்னர் ஆய்வு செய்ய வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் மகளிர் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஊழல்கள் மற்றும் முறைகேடுகளில் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் வள்ளியும், பதிவாளர் சுகந்தியும் அப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள்.
பொருளாதாரத்துறை பேராசிரியர்கள் கலைமதி, சுந்தரி ஆகிய இருவரும் ஓய்வு பெற்ற பின்னரும் தேவையின்றி இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் மீண்டும் பணி நியமனம் செய்யப்பட்டால், அதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தில் ஓய்வூதியம் பிடித்தம் செய்ய வேண்டும். ஆனால், இருவருக்கும் எந்த பிடித்தமுமின்றி தொகுப்பூதியம், ஓய்வூதியம் ஆகிய இரண்டும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி, பேராசிரியர் கலைமதி துணைவேந்தரின் கல்வி ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அன்னை தெரசா பல்கலைக்கழகம் சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்ட செட் தேர்வில் தேர்ச்சி வழங்குவதற்காக ஏராளமானோரிடமிருந்து தலா ரூ.6 லட்சம் லஞ்சம் வாங்கப்பட்டதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூசா எனப்படும் தேசிய உயர்கல்வி திட்டப்படி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு வழங்கப்பட்ட நிதியிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. இவை குறித்து அரசிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.
கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட புகார் மனுக்களும் குப்பையில் வீசப்பட்டுவிட்டன. பல மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வரும் கவர்னர், அதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். முதல்கட்டமாக அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து, அங்கு நடந்துள்ள ஊழல்கள் குறித்து ஊழல் தடுப்புப்பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story