நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் செயல்பாடு நிறுத்திவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு


நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் செயல்பாடு நிறுத்திவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Aug 2018 12:00 AM GMT (Updated: 3 Aug 2018 7:50 PM GMT)

நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், இதற்கான உத்தரவை தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பிறப்பிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தி.மு.க. ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக விசாரிக்க ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு உத்தரவிட்டது.

இந்த விசாரணை ஆணையம், முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசை எதிர்த்து 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு, விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கின் இடைக்கால மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை ஆணையம் அமைப்பதே கண் துடைப்பு நாடகம்தான். இதனால், மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்த இடைக்கால மனு மீதான தீர்ப்பை நீதிபதி நேற்று பிறப்பித்தார். அதில் நீதிபதி கூறியிருப்பதாவது:-

நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டும். இதற்காக தமிழக அரசு ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த ஆணையத்திற்கு வழங்கப்படும் நிதி, இதர சலுகைகள் உள்ளிட்ட அனைத்து செலவினங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.

நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையம் இதுவரை செய்த விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் 2 வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.

அந்த ஆவணங்களை தமிழக அரசு ஆய்வு செய்து, அதில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிடலாம். நீதிபதி ஆர்.ரெகுபதி ஆணையத்திற் காக வழங்கப்பட்டுள்ள பங்களா, அலுவலகம் ஆகியவற்றை காலி செய்ய வேண்டும். அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையிலான விசாரணை ஆணையம் மட்டுமல்லாமல், வேறு சில காரணங்களுக்காக விசாரணை ஆணையங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. அந்த விசாரணை ஆணையங்கள் எல்லாம் மேற்கொண்டு விசாரணையை தொடர வேண்டுமா? அல்லது அவற்றை கலைத்து விடலாமா? என்பது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும்.

ஒருவேளை இந்த விசாரணை ஆணையங்களை தொடர அனுமதித்தால், விசாரணையை முடிக்க வேண்டிய காலத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். இதுமட்டுமல்ல, இந்த விசாரணை ஆணையங்களுக்கு பங்களாக் கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பங்களாக்களை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.

இனி வரும் காலங்களில், இதுபோன்ற விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டால், அதற்கு அரசு அலுவலகங்களில் தான் இடம் வழங்க வேண்டுமே தவிர, தனியாக பங்களாக்கள் வழங்கக்கூடாது. நீதிபதி ஆர்.ரெகுபதி தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் உத்தரவிடுகிறேன்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story