நோயின் பிடியில் இருந்து கருணாநிதி புத்துயிர் பெற்று வருவார் கவிஞர் வைரமுத்து நம்பிக்கை


நோயின் பிடியில் இருந்து கருணாநிதி புத்துயிர் பெற்று வருவார் கவிஞர் வைரமுத்து நம்பிக்கை
x
தினத்தந்தி 3 Aug 2018 10:00 PM GMT (Updated: 2018-08-04T01:40:11+05:30)

நோயின் பிடியில் இருந்து கருணாநிதி புத்துயிர் பெற்று வருவார் என்று கவிஞர் வைரமுத்து நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கருணாநிதி உடல்நலன் குறித்து கவிஞர் வைரமுத்து தினமும் நேரில் வந்து நலம் விசாரித்து செல்கிறார். அதன்படி காவேரி ஆஸ்பத்திரிக்கு நேற்று வருகை தந்த கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-

பின்னடைவு இல்லை என்பதே ஒர் ஆறுதலாக இருக்கிறது. கருணாநிதியுடைய வாழ்வில் சோதனைகள் வந்த காலம் எல்லாம் அது அவருக்கு மேன்மையே தந்து இருக்கிறது.

நெருக்கடி நிலை என்ற சோதனை வந்த போது ஒரு இயக்கத்தை ஒரு தலைவன் எப்படி காப்பாற்ற முடியும் என்ற புகழை அவர் ஈட்டினார். எம்.ஜி.ஆர். பிரிந்த பிறகு 13 ஆண்டுகள் ஆட்சி இல்லாமல் ஒரு தலைவன் எப்படி இயக்கத்தை வழி நடத்த முடியும், கட்டிக்காக்க முடியும் என்ற புகழை அவர் பெற்றார்.

ஒவ்வொரு சோதனையிலும் காலம் அவர் புகழை வளர்த்தே வந்திருக்கிறது. இப்போது இந்த நோயின் தாக்கம் உடல்நலக்குறைவு என்ற இந்த பின்னடைவு கூட கருணாநிதிக்கு நன்மையே தந்து இருக்கிறது என்று சமூக உணர்வாளர்கள் கருதுகிறார்கள்.

கருணாநிதி மீது இருந்த வசை கழிந்துவிட்டது. கருணாநிதி மீது இருந்த விமர்சனம் ஒழிந்துவிட்டது. கருணாநிதி மீது சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் சலவை செய்யப்பட்டு விட்டது. ஒட்டுமொத்த சமூகமும் கருணாநிதியின் பெருமைகளை உணர்ந்துக் கொள்வதற்கு இந்த சந்தர்ப்பம் பெரிய வாசலை திறந்து விட்டிருக்கிறது என்று நாங்கள் கருதுகிறோம்.

கருணாநிதியின் பெருமையை இப்போது தான் தமிழகம் கருத்து வேறுபாடின்றி ஒப்புக்கொண்டு இருக்கிறது. கைரிக்‌ஷாக்களை ஒழித்த தலைவர் இவர் தான் என்ற செய்தி இளைய உலகத்துக்கு தெரிந்து இருக்கிறது.

இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகள் கருணாநிதியை வாழ்த்துகிறார்கள். இட ஒதுக்கீட்டு மூலமாக வாழ்வில் முன்னேறிய பழைய தலைமுறை இப்போது தான் கருணாநிதி புகழை பாடுகிறது.

செம்மொழி என்ற பெருமையை தமிழுக்கு பெற்று தந்த தலைவன் என்பதை ஊடகங் கள் இப்போது உயர்த்தி பிடிக் கின்றன. விமர்சனங்கள் என்ற கரைகள் எல்லாம் இந்த குறையால் தீர்ந்து விட்டது என்று நாம் கருத வேண்டி இருக்கிறது. உலகத்தில் மிக அதிகமாக கவனித்துக்கொண்டிருப்பவரும், உலகத்தில் தமிழர்களால் அதிகம் கொண்டாடப்படுகிறவரும் கருணாநிதி என்ற செய்தி ஓரளவு எங்களுக்கு ஆதரவு தருகிறது. எல்லா சோதனைகளிலும் புகழோடு மீண்டு வந்த கருணாநிதி நோயின் பிடியில் இருந்தும் மீண்டு புத்துயிர் பெற்று வருவார் என்ற நம்பிக்கை தமிழர்கள் நெஞ்சில் இப்போது நிறைந்திருக்கிறது. காலம் கருணாநிதியை வாழ்த்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story