டாக்டர்கள், நர்சுகள் உதவியின்றி வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை


டாக்டர்கள், நர்சுகள் உதவியின்றி வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 5 Aug 2018 12:15 AM GMT (Updated: 2018-08-05T00:41:12+05:30)

டாக்டர்கள், நர்சுகள் உதவியின்றி வீட்டில் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதை ஊக்குவிப்பவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை, 

திருப்பூர் புதுப் பாளையத்தில் ஆசிரியை கிருத்திகா, தனது வீட்டில் குழந்தையை பிரசவித்தபோது சமீபத்தில் உயிரிழந்தார்.

யூ டியுப்பில் கிடைத்த தகவல்களின் அடிப் படையில் பிரசவம் பார்த்ததாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தேனி அருகே கோடாங்கிப் பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்ற என்ஜினீயர் தனது காதல் மனைவி மகாலட்சுமிக்கு பிரசவம் பார்த்து உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்றாலும் இச்சம்பவத்தால் மீண்டும் சர்ச்சை எழுந்து உள்ளது.

ஒரு காலகட்டத்தில் வயதில் மூத்த பெண்களின் உதவியால் வீடுகளிலேயே பெரும்பாலான பெண்கள் தங்கள் குழந்தைகளை பெற்றெடுத்தனர். அந்த காலகட்டத்தில் தாய், சேய் மரண விகிதமும் அதிகமாக இருந்தது.

அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்பட்டு, தாய்- சேய் மரணம் நிகழ்ந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தேனியில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தபோது இச்சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.

அரசின் விதிப்படி அரசு மருத்துவமனைகளுக்கு வந்து தான் பிரசவம் பார்க்க வேண்டும். விதிக்கு மாறாக சிலர் வீடுகளில் பிரசவத்துக்கு முயற்சி செய்வது தவறு. தாய்க்கும், சேய்க்கும் முழு பாதுகாப்பு கிடைக்க வேண்டும். அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தால் தான் நலமாக இருக்கும். சிலர் படித்து இருந்தும் விதிக்கு மாறாக செயல்படும் சூழல் அரசுக்கு தெரியாமல் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகளில் பிரசவத்துக்கு முயற்சிக்கக்கூடாது. அங்கொன்றும், இங்கொன்றுமாக தான் இதுபோன்ற செயல் நடைபெறுகிறது. அது தடுத்து நிறுத்தப்படும். வருகிற காலங்களில் அது சரிசெய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்.

இதுகுறித்து ‘தினத்தந்தி’க்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழகத்தை பொறுத்தவரை 99.9 சதவீத பிரசவம், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் நடக்கிறது. 0.1 சதவீதம்தான் வீடுகள் போன்ற வெளியிடங்களில் நடக்கிறது. 100 சதவீத பிரசவமும் ஆஸ்பத்திரிகளில்தான் நடக்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்த அரசு முனைப்பு காட்டி வருகிறது. இன்னும் ஒரு ஆண்டில் இதை அரசு உறுதி செய்துவிடும்.

தமிழகத்தில் நடக்கும் ஒட்டுமொத்த குழந்தை பிறப்புகளில் 70 சதவீதம் அரசு ஆஸ்பத்திரிகளில்தான் நடக்கின்றன. இதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதுபோல தாய்-சேய் இறப்பு விகிதத்தையும் பெருமளவில் அரசு குறைத்திருக்கிறது. அதற்கேற்ற திட்டங்களை அரசு முனைப்போடு செயல்படுத்தி வருகிறது.

வீடுகளில் குழந்தை பெறுவதில் சிக்கல்கள் வருகின்றன. இதனால் உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. ஒரு உயிர்கூட போகக்கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது. எனவேதான் ஆஸ்பத்திரிகளில் நவீன வசதிகளை அரசு ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது. எனவே பிரசவ விஷயத்தில் கற்கால நிலைக்கு தமிழகத்தை கொண்டு செல்ல அரசு விரும்பவில்லை.

பிரசவம் பற்றி சமூக வலைத்தளங்களில் பல தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை கடுமையான நடவடிக்கைகள் மூலம் அரசு களையும். பிரசவம் பார்ப்பதற்கான தகுதி, எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்கள், இந்திய நர்சிங் குழுமத்தால் அங்கீகரிக்கப்பட்டு மகப்பேறு பயிற்சி பெற்ற நர்சுகள், கிராம சுகாதார செவிலியர்கள் ஆகியோருக்கு உள்ளது.

எனவே வீடுகளில் யாராவது பிரசவம் பார்ப்பதென்பது, இந்த தகுதியைப் பெற்றவர்கள் கடமையாற்றுவதை தடுக்கும் கிரிமினல் குற்றத்தின் கீழ் வந்துவிடுகிறது. ஒருவருக்கென்று தரப்பட்ட பொறுப்பை மற்றவர்கள் எந்த வகையிலும் தடுக்கக்கூடாது. எனவே இந்த விஷயத்தில் கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் மீது அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும்.

மேலும், வீடுகளில் பிரசவம் பார்ப்பது தொடர்பான பிரசாரங்களைச் செய்வோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 420-ம் பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஹீலர் பாஸ்கர் மீதும் இந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story