ரெகுபதி விசாரணை ஆணையத்தை கலைப்பது பற்றி அரசு முடிவு எடுக்கும் அமைச்சர் ஜெயக்குமார்

புதிய தலைமைச் செயலகம் கட்டிடம் தொடர்பான முறைகேடு புகார் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை ஆணையத்தை கலைப்பது பற்றி தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆலந்தூர்,
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு பற்றி விசாரிக்க நீதிபதி ஆர்.ரெகுபதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த விசாரணை ஆணையத்தின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும், இதற்கான உத்தரவை தமிழக அரசு ஒரு வாரத்தில் பிறப்பிக்கவேண்டும் என்றும் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று டெல்லி சென்ற அமைச்சர் ஜெயக்குமாரிடம் சென்னை விமான நிலையத்தில் இதுபற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், ரெகுபதி ஆணையத்தை கலைப்பது பற்றி அரசு கொள்கை முடிவு எடுக்கும் என்றார்.
அவர் தொடர்ந்து கூறியதாவது:-
தமிழக அரசின் செயல்பாடுகள் சரியாக இருப்பதால் தான் தவறு செய்பவர்கள் சிக்குகின்றனர். தவறு செய்பவர்கள் சிக்கவில்லை என்றால் அரசு தவறு செய்பவர்களுக்கு துணை போவதாக கூறமுடியும்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். யார் தவறு செய்திருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு வெளிப்படையான தன்மையுடன் இருப்பதால் தான் யார் குற்றம் செய்தாலும் அதை வெளிகொண்டு வந்து தண்டனை கிடைக்கும் வகையில் செயல்படுகிறது. அதை முடிமறைக்க வேண்டிய அவசியம் யாருக்கும் கிடையாது.
கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்தபோது தவறுகள் வெளியே வராது.
சிலை கடத்தல் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு திராவிடர் கழக தலைவர் வீரமணி வரவேற்பு தெரிவித்து உள்ளார். சிலை கடத்தல் விவகாரம் சர்வதேச பிரச்சினையாக இருக்கிறது. இதில் மாநில போலீஸ் எப்படி செயல்பட முடியும்? சர்வதேச அளவில் நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ. விசாரணைதான் சரியாக இருக்கும். இதில் சி.பி.ஐ. உண்மைகளை கண்டறிந்து யார் தவறு செய்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தும்.
இரு வகையான அதிகாரிகள் இருக்கின்றனர். அரசாங்கத்திற்கு முழுமையாக விசுவாசமாக இருந்து திறமையாக செயல்படும் அதிகாரிகள் தங்களை விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை. ஆனால் சில அதிகாரிகள் விளம்பரம் தேடிக்கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
Related Tags :
Next Story