நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எத்தனை? டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு


நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எத்தனை? டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2018 3:45 AM IST (Updated: 5 Aug 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பிடிவாரண்டுகள் எத்தனை? டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை, 

நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பிடிவாரண்டு உத்தரவுகள் எத்தனை என்பது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

பிடிவாரண்டு உத்தரவுகளை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது அவர், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நெல்லை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய 12 மாவட்டங்களில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ள பிடிவாரண்டு குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு, அந்தந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஐகோர்ட்டு குறிப்பிட்டு இருந்த மாவட்டங்களில் 21 ஆயிரத்து 129 பிடிவாரண்டு உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளதாக முதன்மை அமர்வு நீதிபதிகள் தரப்பில் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. போலீஸ் சூப்பிரண்டுகள் தரப்பில் 13 ஆயிரத்து 108 பிடிவாரண்டு உத்தரவுகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

நிலுவையில் உள்ள பிடிவாரண்டு விவரங்களை முதன்மை அமர்வு நீதிபதிகள் அந்தந்த மாவட்ட உதவி சூப்பிரண்டு, துணை கமிஷனர் ஆகியோருக்கு 6 வாரத்திற்குள் வழங்க வேண்டும். அந்த விவரங்களை கொண்டு பிடிவாரண்டு உத்தரவுகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பின்னர் எவ்வளவு பிடிவாரண்டு உத்தரவு நிறைவேற்றப்பட்டது? எவ்வளவு பிடிவாரண்டு உத்தரவு நிலுவையில் உள்ளது? அதற்கான காரணம் என்ன? நிறைவேற்ற மேற்கொள்ளப்பட்ட எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட விவரத்தை தமிழக டி.ஜி.பி. தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 2-வது வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

Next Story