மதுரை அருகே நெல்லில் விஷம் கலந்து 43 மயில்கள் கொல்லப்பட்டன


மதுரை அருகே நெல்லில் விஷம் கலந்து 43 மயில்கள் கொல்லப்பட்டன
x
தினத்தந்தி 4 Aug 2018 10:15 PM GMT (Updated: 2018-08-05T01:35:19+05:30)

மதுரை அருகே 43 மயில்கள் நெல்லில் விஷம் கலந்து கொல்லப்பட்டன.

மதுரை,

மதுரை அருகே 43 மயில்கள் நெல்லில் விஷம் கலந்து கொல்லப்பட்டன. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை யானைமலையில் அதிக எண்ணிக்கையில் மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் அங்குள்ள கிராமப்பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் கொடிக்குளம் கண்மாய், விவசாய கல்லூரி அருகே உள்ள தென்னை தோப்புகளில் தஞ்சம் அடைகின்றன.

இந்த நிலையில் நேற்று காலை கொடிக்குளம் வரத்து கால்வாய் பகுதியில் ஏராளமான மயில்கள் இறந்து கிடந்தன. இதுதொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

உடனடியாக வன அலுவலர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது ஆங்காங்கே மயில்கள் இறந்து கிடந்தன. சில மயில்களுக்கு அருகே நெல் சிதறி கிடந்தது.

இறந்து கிடந்த 43 மயில்களையும், அருகில் சிதறி கிடந்த நெல்லையும் வன அலுவலர்கள் சேகரித்தனர். அந்த இடத்தில் துர்நாற்றம் வீசியதால் இந்த மயில்கள் நேற்று முன்தினம் மாலையே இறந்திருக்கலாம் என்று தெரிகிறது.

இறந்த மயில்களின் உடலை பரிசோதனை செய்வதற்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கும், நெல் ஆய்வுக்கூடத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நெல்லில் விஷம் கலந்து மயில்கள் சாகடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவருகிறது.

இதுகுறித்து வன அலுவலர் ஆறுமுகம் கூறியதாவது:-

9 ஆண் மயில்கள், 34 பெண் மயில்கள் என மொத்தம் 43 மயில்கள் இறந்துள்ளன. இன்னும் மயில்கள் இறந்து கிடக்கிறதா? என அந்த பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறோம். மயில்கள் இறந்து கிடந்த பகுதியில் ஆங்காங்கே நெல் கிடந்தது. எனவே அதனை தின்றதால் தான் மயில்கள் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

தேசிய பறவையான மயில், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் முதல் இடத்தில் உள்ளதால் அவற்றை சாகடித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் இவ்வளவு மயில்கள் ஒரே நேரத்தில் இறந்து கிடப்பது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story