உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா?


உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ஐகோர்ட்டில் இன்று தாக்கல் செய்யப்படுமா?
x
தினத்தந்தி 5 Aug 2018 11:30 PM GMT (Updated: 2018-08-06T00:40:00+05:30)

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த கால அட்டவணையை தாக்கல் செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது

சென்னை, 

கோர்ட்டு அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த கால அட்டவணையை தாக்கல் செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017–ம் ஆண்டு நவம்பர் 17–ந் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை.

இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 31–ந் தேதி) தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. ஆனால், அன்று தீர்ப்பு வழங்கப்படவில்லை.

அதேநேரம், ‘தேர்தல் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டும், இதுவரை ஏன் தேர்தல் நடத்தவில்லை? என்பது உள்பட பல கேள்விகளை நீதிபதிகள் சரமாரியாக எழுப்பினார்கள்.

அதற்கு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன், ‘இந்த வழக்கில், மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து விசாரணையை ஆகஸ்டு 6–ந் தேதிக்கு (இன்று) தள்ளிவைத்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அன்று தாக்கல் செய்யவில்லை என்றால், மாநில தேர்தல் ஆணையர், செயலாளர் ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்புசட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் முன்பு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது உள்ளாட்சி தேர்தல் கால அட்டவணை தாக்கல் செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், உள்ளாட்சி தொகுதிகளை மறுவரையறை செய்யும் பணி முடிவடையவில்லை என்றும், அதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது என்றும் காரணம் கூறி, தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் கால அவகாசம் கேட்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தயாரிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Next Story