எந்திரன் படக்கதை விவகாரம்: இயக்குனர் ‌ஷங்கர் புதிய மனு தாக்கல் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


எந்திரன் படக்கதை விவகாரம்: இயக்குனர் ‌ஷங்கர் புதிய மனு தாக்கல் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 5 Aug 2018 8:08 PM GMT (Updated: 2018-08-06T01:38:49+05:30)

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன் என்ற திரைப்படத்தை இயக்குனர் ‌ஷங்கர் இயக்கினார்.

சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன் என்ற திரைப்படத்தை இயக்குனர் ‌ஷங்கர் இயக்கினார். இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்பவர் கடந்த 2010–ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ரூ.1 கோடி இழப்பீடும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த ஜூலை 26–ந்தேதி விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இயக்குனர் ‌ஷங்கர் தன் தரப்பு ஆதாரங்களை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ‘மாஸ்டர்’ கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும். பின்னர் அவரிடம் மனுதாரர் தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்யவேண்டும். இவற்றை ஆகஸ்டு 1–ந்தேதி முதல் 8–ந்தேதிக்குள் செய்து முடிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குனர் ‌ஷங்கர் புதிய மனுவை, ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார், அதில், ‘என்னுடைய கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் சம்பந்தமே இல்லை. அதில் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்த வழக்கில் முக்கியமான சில ஆவணங்களை என் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. எந்திரன் படத்தின் கதையை ‘முத்திரையிடப்பட்ட உறையில்’ தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த உறையையும், இந்த கதையை காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவு செய்து பெற்ற சான்றிதழையும் தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


Next Story