ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு இன்று வெளியிடப்படும் என்று ஆணையம் அறிவிப்பு


ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு இன்று வெளியிடப்படும் என்று ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Aug 2018 10:15 PM GMT (Updated: 2018-08-06T01:41:43+05:30)

கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்றும் (திங்கள்), நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை (செவ்வாய்) அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

சென்னை, 

கூட்டுறவு சங்கங்களுக்காக நடைபெற்ற தேர்தலில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக சென்னை ஐகோர்ட்டில் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர், இந்த தேர்தல் தொடர்பான புகார்களை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் 4 பேர் தலைமையில் 4 குழுக்களை அமைத்து கடந்த 3–ந்தேதி உத்தரவிட்டனர்.

மேலும், புகார் தெரிவிக்காத, வழக்கு தொடரப்படாத கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என்றும், தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தின், ஆணையர் மு.ராஜேந்திரன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் 18 ஆயிரத்து 465 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மார்ச் 12–ந்தேதி முதல் மே 7–ந்தேதி வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்தப்பட்டது.

இந்ததேர்தல் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தற்போதைய நிலையே தொடரவேண்டும் (தடை) என்று கடந்த ஏப்ரல் 9–ந்தேதி உத்தரவிட்டது. அதனால், தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

பின்னர் இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ‘ஐகோர்ட்டு மதுரை கிளை விதித்த தடையை விலக்கியும், ஓட்டு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவித்தல் ஆகிய பணிகளை தவிர்த்து, பிற தேர்தல் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் இந்த தேர்தல் வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேர்தல் நடவடிக்கைகளை மீண்டும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டு கடந்த 3–ந்தேதி தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது.

அதில், நிறுத்தப்பட்ட ஓட்டு எண்ணும் பணியை தொடரலாம். தேர்தல் முடிவுகளை வெளியிடலாம் என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக்கூடாது’ என்று கூறியுள்ளது.

இதன் அடிப்படையில் வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களை தவிர்த்து பிற சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, புதிய நிர்வாகக்குழு தேர்தல் முடிவுகளை உடன் அறிவித்திட வேண்டும் என்று அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 2–ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கு தலைவர், துணைத் தலைவர் தேர்தல் முடிவுகள் 6–ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும். 3 மற்றும் 4–ம் நிலைகளில் உள்ள சங்கங்களுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் 7–ந்தேதியும் (நாளையும்) 3, 4–ம் நிலையிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் வருகிற 11–ந்தேதியும் நடத்தப்படும்.

கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல், ஆணையத்தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப்பட்ட, ஒத்திவைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்டு, நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடர ஆணையிடப்பட்டுள்ள சங்கங்களுக்கான தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story