கருணாநிதியை ஜனாதிபதி நேரில் பார்த்தார் உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்


கருணாநிதியை ஜனாதிபதி நேரில் பார்த்தார் உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார்
x
தினத்தந்தி 6 Aug 2018 12:15 AM GMT (Updated: 2018-08-06T02:21:48+05:30)

சென்னையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேரில் பார்த்தார். அவரது உடல் நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டு அறிந்தார். #Karunanidhi

சென்னை, 

தி.மு.க. தலைவர் கருணாநிதி, உடல்நல குறைவின் காரணமாக கடந்த மாதம் 27-ந் தேதி நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இன்றுடன் 10 நாட்கள் ஆகின்றன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்து கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரித்து சென்றனர்.

மேலும் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு உள்பட பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து உடல்நலம் விசாரித்து சென்றனர்.

அந்த வகையில் கருணாநிதியை நேரில் பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று சென்னை வந்தார். அவர் ஐதராபாத்தில் தனது நிகழ்ச்சியை முடித்துவிட்டு, விமானம் மூலம் நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் 2.30 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் காவேரி ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். அவருடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தும் அதே காரில் சென்றார்.

ஜனாதிபதி 2.45 மணிக்கு காவிரி ஆஸ்பத்திரிக்கு வந்தடைந்தார். அங்கு, கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை பார்த்தார். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி. மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

15 நிமிடங்கள் காவேரி ஆஸ்பத்திரியில் இருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது ஆஸ்பத்திரிக்கு வெளியே ஏராளமான தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அவர்களை பார்த்ததும் ஜனாதிபதி காரை நிறுத்தி கீழே இறங்கி அவர் களை பார்த்து கை அசைத்துவிட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

3.15 மணிக்கு விமான நிலையம் சென்று அடைந்த அவர், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் கேரளா புறப்பட்டு சென்றார்.

விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தியும், பூங்கொத்து கொடுத்தும் வழியனுப்பி வைத்தனர்.

ஆஸ்பத்திரியில் கருணாநிதியை பார்த்தது மற்றும் அவரது உடல்நலம் பற்றி விசாரித்தது குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் பதிவிட்டு இருக்கிறார். அந்த பதிவுடன் மு.க.ஸ்டாலின், கனிமொழி மற்றும் டாக்டர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், “தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னையில் சந்தித்தேன். அவரின் குடும்பத்தார் மற்றும் டாக்டரிடம் அவருடைய உடல்நலம் குறித்து கேட்டறிந்தேன். தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், முதுபெரும் தலைவருமான கருணாநிதி விரைவில் குணம் அடைய வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு உள்ளார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி சென்னை நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஜனாதிபதி சென்ற பாதையிலும், காவேரி ஆஸ்பத்திரி முன்பும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

Next Story