போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர்


போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடையாறு ஆற்றில் குதித்த வாலிபர்
x
தினத்தந்தி 5 Aug 2018 9:02 PM GMT (Updated: 5 Aug 2018 9:02 PM GMT)

சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர், திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து விட்டார்.

அடையாறு, 

சென்னை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர், திடீரென பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து விட்டார். அவரது கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தீயணைப்பு வீரர்கள் தேடிவருகிறார்கள்.

சென்னை பெசன்ட் நகர் அருணாசலபுரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக்கொண்டு அபிராமபுரத்தை சேர்ந்த மற்றொரு நண்பரை அவரது வீட்டில் விடுவதற்காக பெசன்ட் நகரில் இருந்து அபிராமபுரம் நோக்கி சென்றார்.

அடையாறு திரு.வி.க. பாலம் அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார், ராதாகிருஷ்ணன் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளை சோதனைக்காக நிறுத்தினர். அப்போது ராதாகிருஷ்ணன் குடிபோதையில் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவரது மோட்டார் சைக்கிளை பிடித்து வைத்துக்கொண்ட போக்குவரத்து போலீசார், அவரது பெற்றோரை அழைத்து வரும்படி கூறினர்.

அது தனது நண்பரின் மோட்டார்சைக்கிள் என்பதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி போலீசார் கூறியதாலும் பதற்றம் அடைந்த ராதாகிருஷ்ணன், மோட்டார் சைக்கிளை தரும்படி போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த ராதாகிருஷ்ணன், திடீரென திரு.வி.க. பாலத்தில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

திருவான்மியூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் குதித்த வாலிபர் ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

நேற்று காலை முதல் மீண்டும் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் தேடினார்கள். வாலிபரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவர் ஆற்றில் உள்ள சேற்றில் சிக்கி இறந்தாரா? அல்லது தப்பிச்சென்று விட்டாரா? என்பது மர்மமாக உள்ளது. தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அவரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையில் நேற்று மாலை 4 மணியளவில் திரு.வி.க. பாலம் அருகே காத்து நின்ற ராதாகிருஷ்ணனின் பெற்றோர் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள், போக்குவரத்து போலீசார் துன்புறுத்தியதால்தான் அவர் ஆற்றில் குதித்து உள்ளார் என்று கூறி திடீரென அங்கேயே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

அவர்களை அடையாறு உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மனோகர் ஆகியோர் சமாதானம் செய்து கலைந்துபோக செய்தனர்.

Next Story