பெண் கொலையில் உறவுக்கார சிறுவன் கைது பரபரப்பு வாக்குமூலம்


பெண் கொலையில் உறவுக்கார சிறுவன் கைது பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:15 PM GMT (Updated: 2018-08-06T02:37:47+05:30)

அமைந்தகரையில் கை நரம்பு அறுக்கப்பட்டு பெண் இறந்து கிடந்த வழக்கில், அவரது உறவினரான 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி, 

அமைந்தகரையில் கை நரம்பு அறுக்கப்பட்டு பெண் இறந்து கிடந்த வழக்கில், அவரது உறவினரான 10-ம் வகுப்பு மாணவரை போலீசார் கைது செய்தனர். தனது மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அத்தையை கொன்றதாக கைதான அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.

சென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் சங்கரசுப்பு (வயது 40). அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி (35). இவர் வீட்டின் அருகேயே மற்றொரு மளிகை கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 2-ந் தேதி மதியம் கடையில் இருந்து சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த சங்கரசுப்பு, படுக்கை அறையில் தமிழ்ச்செல்வி, கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அமைந்தகரை போலீசார், தமிழ்ச்செல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மர்மச் சாவாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

அண்ணாநகர் துணை கமிஷனர் குணசேகரன், இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து தமிழ்ச்செல்வி சாவுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். தமிழ்ச்செல்வி வீட்டில் இருந்த பொருட்கள் எதுவும் கொள்ளைபோகவில்லை. எனவே நகை, பணத்துக்காக இந்த சம்பவம் நடக்கவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

குடும்பத்தகராறு காரணமாக தமிழ்ச்செல்வியே தனது கை மணிக்கட்டு நரம்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் தமிழ்ச்செல்வியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர், கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத்திணறி இறந்துள்ளதாக தெரியவந்தது. இதனால் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

கொலையாளிகள் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். பட்டப்பகலிலேயே கொலை நடந்து உள்ளதால், நன்கு தெரிந்த நபர்களே இதில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் கருதினார்கள்.

தமிழ்ச்செல்வி வீட்டுக்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், கொலை நடந்த அன்று, அதே தெருவில் வசித்து வரும் சங்கரசுப்புவின் தங்கை மகனான, 15 வயது நிரம்பிய 10-ம் வகுப்பு மாணவர் காலை 11.02 மணியளவில் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு சென்றுவிட்டு, 11.38 மணியளவில் தனது வீட்டுக்கு திரும்பிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

அந்த மாணவரிடம் போலீசார் விசாரித்தபோது, முதலில் தனது அத்தை வீட்டுக்கு சுத்தியல் வாங்கச்சென்றதாக கூறிய அவர், அதன்பிறகு வீட்டின் மாடியில் இருந்ததாக முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசாருக்கு அவர் மீதான சந்தேகம் அதிகரித்தது.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், தனது மகளை காதலிக்க அத்தை தமிழ்ச்செலவி எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து மாணவரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாரிடம், மாணவர் அளித்து உள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

எனது மாமா சங்கரசுப்பு குடும்பத்தினர் வசித்துவரும் அதே தெருவில்தான் எங்கள் வீடும் உள்ளது. சிறு வயது முதலே நானும், எனது தம்பியும் மாமா வீட்டுக்கு சென்று விளையாடுவோம். அப்போது எனது மாமா மகளுடன் நான் பழகினேன். மாமா மகள் என்ற முறையில் அவள் மீது எனக்கு ஒருதலையாக காதல் ஏற்பட்டது.

அவள் பெரியவள் ஆனதும், அவளுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று எனது அத்தை தமிழ்ச்செல்வி என்னை கண்டித்தார். இதனால் மாமா மகளை பார்க்க முடியாமல், பேச முடியாமல் தவித்தேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது தம்பியின் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு வரும்படி மாமா மகளை அழைத்து இருந்தேன். ஆனால் அவள் வரவில்லை.

இதுபற்றி அவளை நேரில் சந்தித்து கேட்டேன். இதை பார்த்துவிட்ட எனது அத்தை, என்னை கண்டித்ததுடன், கையாலும் அடித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது அத்தை இருக்கும் வரையில் எனது காதலுக்கு எதிர்ப்பு வந்துகொண்டே இருக்கும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்.

சம்பவத்தன்று மாமா கடைக்கு சென்று விட்டார். அவரது மகன், மகள் இருவரும் பள்ளிக்கு சென்று விட்டனர். வீட்டில் அத்தை மட்டும் தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டுக்கு சென்றேன். கதவு பூட்டாமல் லேசாக சாத்தப்பட்டு இருந்தது. உள்ளே சென்றபோது, படுக்கை அறையில் அத்தை அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

படுக்கை அறைக்குள் நைசாக நுழைந்த நான், அத்தை தமிழ்ச்செல்வி மீது ஏறி அமர்ந்துகொண்டு அவரது கழுத்தை நெரித்தேன். அவர், என்னிடம் இருந்து தப்பிக்க முயன்றார். உடனே அருகில் இருந்த கரடி பொம்மையை எடுத்து அவரது முகத்தில் வைத்து அழுத்தினேன். இதில் அவர், மூச்சுத்திணறி இறந்து விட்டார்.

அவரே தற்கொலை செய்துகொண்டதுபோல் அனைவரையும் நம்ப வைக்க சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து அவரது கை மணிக்கட்டு நரம்பை அறுத்து துண்டித்தேன்.

மனித உடலில் எது உயிர் நாடி. எந்த பகுதியில் அறுத்தால் உயிர்போகும் என பள்ளியில் சொல்லிக்கொடுத்து உள்ளனர். அதை வைத்தே இவ்வாறு கை மணிக்கட்டு நரம்பை அறுத்தேன். பின்னர் எதுவும் தெரியாததுபோல் வீட்டுக்கு சென்று விட்டேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்ச்செல்வியின் உறவினர் மகன் என்பதால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை. சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த சங்கரசுப்பு, தனது மனைவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அலறினார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது தனக்கும், அந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் மாணவரும் மருத்துவமனைக்கு சென்றார். கொலை செய்த குற்ற உணர்வு எதுவும் இல்லாமல் அத்தையின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு உள்ளார்.

கைதான மாணவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார், அவரை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். ஒருதலை காதலால் சொந்த அத்தையையே 10-ம் வகுப்பு மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story