டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஜெகத்ரட்சகன் வெளியிட, டாக்டர் முகமது ரேலா பெற்றுக்கொண்டார்


டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா ஜெகத்ரட்சகன் வெளியிட, டாக்டர் முகமது ரேலா பெற்றுக்கொண்டார்
x
தினத்தந்தி 5 Aug 2018 10:15 PM GMT (Updated: 5 Aug 2018 9:13 PM GMT)

டாக்டர் பிரியா ராமச்சந்திரன் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜெகத்ரட்சகன் வெளியிட, டாக்டர் முகமது ரேலா பெற்றுக்கொண்டார்.

சென்னை, 

டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ‘தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலை வானதி பதிப்பகம் வெளியிடுகிறது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் தலைமை தாங்கினார்.

ஆன்மிக சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் முன்னிலை வகித்தார். டி.கே.எஸ். கலைவாணன் வரவேற்புரையாற்றினார். ‘தர்மயுத்தத்தில் கர்ம யோகியும் ஞான யோகியும்’ நூலை முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன் வெளியிட்டார். அதன் முதல் பிரதியை கல்லீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் முகமது ரேலா பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து நடந்த சிந்தனை அரங்கத்துக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜ் நடுவராக இருந்தார்.

விழாவில் ஜெகத்ரட்சகன் பேசியதாவது:-

இந்த நூல் தமிழ்த்தாய்க்கு மேலும் ஒரு மகுடம். பழையதை சொல்ல வேண்டும். அதை புதியதாக, புதுமையாக சொல்ல வேண்டும் என்பது இந்த நூலில் உள்ள அற்புதமான செய்தி.

நூலை பெற்றுக்கொண்டிருக்கிற டாக்டர் முகமது ரேலா தான் தமிழ்நாட்டின் இன்றைக்கு சூப்பர் ஸ்டார். உலகில் இருக்கிற புகழ்வாய்ந்த நம்பர்-1 டாக்டர் யார் என்றால், முகமது ரேலா தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவ்வை நடராஜன் பேசியதாவது:-

தர்மயுத்தம் என்பது அன்றாடம் நடப்பது. அரசியலில் பதவியில் இருப்பவர்கள் கூட அடிக்கடி சொல்வது தர்மயுத்தம் தான். ஆனால் அது தர்மமா? யுத்தமா? என்பது உண்மையிலேயே ஆராயவேண்டியது. தமிழ் இலக்கியத்தில் தொடர்ந்து வருவது அறம் என்ற சொல் தான். அறம் இல்லாமல் அரசு, பொருள் மற்றும் இன்பம் இல்லை. தமிழின் சாற்றை பிழிந்தால் சொட்டுகிற தேன் துளி அறம் தான்.

தமிழ் ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் நடத்துவதாலும், தமிழறிஞர்கள் ஆராய்ச்சி செய்வதாலும் தமிழ் வளரும். ஆனால் என்ஜினீயர்கள், டாக்டர்கள், கட்டிட வல்லுனர்கள், கலைத்திறம் வாய்ந்தவர்கள் என்று எல்லோரும் எப்போது தமிழை வளர்க்க தொடங்குகிறார்களோ, அதுதான் வளர்ச்சி. அதுதான் நமக்கு மகிழ்ச்சியை தருவதாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியை ப.யாழினி தொகுத்து வழங்கினார். இறுதியில் வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் ராமநாதன் நன்றியுரை நிகழ்த்தினார். இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், முன்னாள் டி.ஜி.பி.வைகுந்த், இலக்கிய வீதி இனியவன், சாரதா நம்பி ஆரூரன் உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.

Next Story