கல்விச் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


கல்விச் சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Aug 2018 9:29 PM GMT (Updated: 2018-08-06T02:59:05+05:30)

10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ்களில் பிறந்த தேதியை மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஐகோர்ட்டில், இந்துமதி என்ற மாணவி ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘நான் 1997-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி பிறந்தேன். ஆனால், என்னுடைய 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களிலும், மாற்றுச்சான்றிதழிலும் 1997-ம் ஆண்டு மே 17-ந்தேதி பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உண்மையான பிறந்த தேதியை குறிப்பிடும்படி பள்ளிக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு கடந்த ஜூலை 11-ந்தேதி மனு கொடுத்தும், பரிசீலிக்கப்படவில்லை. எனவே, என்னுடைய கல்விச்சான்றிதழ்களில் உண்மையான பிறந்த தேதியை குறிப்பிட உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு சிறப்பு பிளடர் சி.முனுசாமி, ‘தமிழ்நாடு இடைநிலை கல்விச்சான்றிதழ் விதிகளின்படி, பிறந்த தேதி, பெயர் உள்ளிட்ட விவரங்களை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு முன்பாகவே மாற்றிவிட வேண்டும். அதன்பின்னர் எந்த மாற்றமும் செய்ய முடியாது’ என்று வாதிட்டார். மேலும் அவர், 1-ம் வகுப்பில் சேரும் குழந்தைக்கு 5 வயது நிறைவடைந்து இருக்கவேண்டும். அதுபோன்ற காலங்களில் சில பெற்றோர், வயதை கூட்டி போட்டு குழந்தைகளை பள்ளியில் சேர்த்து விடுகின்றனர்’ என்றும் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘மனுதாரர் 1997-ம் ஆண்டு ஜூலை 17-ந்தேதி தான் பிறந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவரது பெற்றோர் மே 17-ந்தேதி பிறந்ததாக கூறி, 1-ம் வகுப்பில் சேர்த்துள்ளனர். இப்போது பிறந்த தேதியில் மாற்றம் செய்தால், இதுவரை மனுதாரர் பெற்ற கல்வி அனைத்தும் சட்டப்படி ஏற்க முடியாததாகி விடும்.

மேலும், அவரது பெற்றோர் செய்த தவறுக்கு, அவர்களது பிள்ளை பாதிக்கப்படக்கூடாது என்று கூறுவதை இதுபோன்ற வழக்கில் ஏற்க முடியாது. எனவே, மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story