கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதில் சவால் - மருத்துவ அறிக்கை


கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பதில் சவால் - மருத்துவ அறிக்கை
x
தினத்தந்தி 6 Aug 2018 1:17 PM GMT (Updated: 6 Aug 2018 1:46 PM GMT)

கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #CauveryHospital #KarunanidhiHealth



சென்னை, 


உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதுதவிர கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டனில் இருந்து புகழ் பெற்ற டாக்டர் முகமது ரேலா வரவழைக்கப்பட்டார். அவரும் காவேரி ஆஸ்பத்திரி டாக்டர் குழுவினருடன் இணைந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை தொடர்ந்து கவனித்து வரும் மருத்துவக்குழுவினர், அவருக்கு தினந்தோறும் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் 24 மணி நேரமும் அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

கருணாநிதிக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று குணமடைந்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.

சிறிய பின்னடைவு

இந்த நிலையில் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக இன்று மதியம் தகவல்கள் வெளியானது. 

இன்று மருத்துவமனைக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசுகையில், அவரின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள், குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தேன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காலை பின்னடைவு ஏற்பட்டு தற்போது கண்காணிப்பில் உள்ளார். கருணாநிதி பூரண உடல் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார். இதற்கிடையே அவர் நலமுடன் உள்ளார் எனவும்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனை அவருடைய உடல்நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளது, 24 மணி நேரத்தில் சிகிச்சைக்கு கருணாநிதி எப்படி ஒத்துழைக்கிறார் என்பதை பொறுத்தே கணிக்க முடியும் என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story