இடஒதுக்கீடு அறிவிப்பாணை வெளியிட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்


இடஒதுக்கீடு அறிவிப்பாணை வெளியிட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 6 Aug 2018 11:59 PM GMT (Updated: 6 Aug 2018 11:59 PM GMT)

மாநில தேர்தல் ஆணையம் நேற்று ஐகோர்ட்டில் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்யவில்லை. இடஒதுக்கீடு அறிவிப்பாணையை அரசு வெளியிட்ட பின்னரே உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட முடியும் என்று அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.

சென்னை,

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘உள்ளாட்சி தேர்தலை 2017-ம் ஆண்டு நவம்பர் 17-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும்’ என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ந்தேதி உத்தரவிட்டனர்.

ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் அமல்படுத்தவில்லை. இதையடுத்து அவர்கள் மீது தி.மு.க. அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘ஐகோர்ட்டு உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இதனால், மத்திய அரசு வழங்கும் நிதி சுமார் ரூ.3 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு கிடைக்கவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என்று சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

அதற்கு பதில் அளிக்க, மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் நெடுஞ்செழியன் காலஅவகாசம் கேட்டார். இதையடுத்து ஆகஸ்டு 6-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான கால அட்டவணையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நேற்று தேர்தல் கால அட்டவணை தாக்கல் செய்யப்படவில்லை. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்யும் பணி நடந்து வருகிறது. சென்னை பெருநகர மாநகராட்சியில் சில வார்டுகள் மற்றும் 7 மாவட்டங்களில் நிலுவையில் உள்ள மறுவரையறை பணி வருகிற 15-ந்தேதியுடன் முடிவடைந்து விடும். இதன்பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்தது தொடர்பான அறிக்கை வருகிற 31-ந்தேதிக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த அறிக்கையை ஆய்வு செய்து தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டதும், வார்டு மறுவரையறை குறித்து அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

இந்த அறிவிப்பாணையை வெளியிட்டு 6 வாரத்துக்குள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான வார்டுகளை ஒதுக்கி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இந்த இடஒதுக்கீடு முறை, வார்டு மறுவரையறை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

இந்த அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்ட பின்னர், 3 மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த அறிக்கைக்கு, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற அக்கறை இல்லை. அவர்கள் வேண்டுமென்றே இழுத்தடித்து வருகின்றனர். இந்த ஆண்டு அவர்கள் தேர்தலை நடத்தமாட்டார்கள். எனவே, ஆணையர், செயலாளர் ஆகியோரை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நேரடியாக சிறைக்கு அனுப்பவேண்டும்’ என்று வாதிட்டார்.

அரசு தரப்பில் மூத்த வக்கீல் அர்யமா சுந்தரம், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வக்கீல் ஏ.எல்.சோமயாஜி ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதால், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை வேறு ஒரு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் முடிவு செய்தனர்.

பின்னர், இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் ஆகியோர் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரிப்பார்கள் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story