பிறருக்கு முன் உதாரணமாக அரசு ஆஸ்பத்திரியில் தான் தலைமை நீதிபதி சிகிச்சை பெற்றார்


பிறருக்கு முன் உதாரணமாக அரசு ஆஸ்பத்திரியில் தான் தலைமை நீதிபதி சிகிச்சை பெற்றார்
x
தினத்தந்தி 7 Aug 2018 12:01 AM GMT (Updated: 7 Aug 2018 12:01 AM GMT)

உடல் நலம் பாதிக்கப்பட்டபோது தனியார் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பிறருக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன் புகழ்ந்து பேசினார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில், இந்திரா பானர்ஜிக்கு நேற்று பிற்பகலில் பிரிவு உபசார விழா நடந்தது.

அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த் பாண்டியன், தலைமை நீதிபதியை பாராட்டி பேசியதாவது:- சென்னை ஐகோர்ட்டில் 16 மாதங்கள் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி இருந்தது மறக்க முடியாத காலமாகும். இந்த காலக்கட்டத்தில் அவர் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் பலவற்றை வழங்கியுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டின், 2-வது பெண் தலைமை நீதிபதி என்ற பெயரை பெற்ற இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லும் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

16 மாதங்களில், தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் பயணம் செய்து, மாவட்ட நீதிமன்றங்களில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி கலந்து கொண்டார்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வழிவகை இருந்தும், அதை தலைமை நீதிபதி தவிர்த்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, தமிழக அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற்றார். இது ஒரு முன் உதாரண செயலாகும். இவ்வாறு அவர் பேசினார்.

இதன்பின்னர் நன்றி தெரிவித்து, தலைமை நீதிபதி பேசியதாவது:-
எனது பணிக்காலத்தில் யாருக்கும் பயப்படாமல், துணிவோடும், நேர்மையோடும், மனசாட்சியுடன், பாரபட்சமின்றி தீர்ப்புகளை வழங்கியுள்ளேன். பாரம்பரியத்தோடும், கலாசாரத்தோடும் பின்னிப்பிணைந்த தமிழகத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததை பெருமையாக கருதுகிறேன்.

கனத்த இதயத்தோடுதான் விடைபெறுகிறேன். டெல்லிக்கு சென்றாலும், என் நினைப்பெல்லாம் தமிழகத்தில் தான் இருக்கும். நான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில், ஒரு தடவை கூட வக்கீல்கள் நீதித்துறை பணிக்கு தடையாக இருந்தது இல்லை

தமிழக முதல்-அமைச்சர் எனக்கு வாழ்த்து சொல்ல வந்தபோது, நீதித்துறை பணிகளுக்கான நிதிஒதுக்கீட்டிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். அவரும் அந்த கோரிக்கையை ஏற்று கொண்டார். அதேபோல இளம் வக்கீல்களை ஊக்குவிக்கும் விதமாக மூத்த வக்கீல்கள் செயல்படவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசு வக்கீல்கள், வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், புதிய தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தஹில் ரமணி பொறுப்பு ஏற்கும்வரை, இப்பதவியை வகிப்பார்.

Next Story