உயர் கல்வித் துறை கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


உயர் கல்வித் துறை கட்டிடங்களை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 7 Aug 2018 12:15 AM GMT (Updated: 7 Aug 2018 12:04 AM GMT)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு இடங்களில் 29 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட உயர் கல்வித்துறை கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை,

தேனி மாவட்டம், வீரபாண்டி, தப்புகுந்து கிராமத்தில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான நிர்வாகம் மற்றும் கல்வியியல் கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் புதுப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள்; அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டம் கீழப்பழூவூர் கிராமத்தில் உள்ள அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் 10 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள்; நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டிடம்; திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறை கட்டிடங்கள்; என மொத்தம் 29 கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இது தவிர, ஈரோடு மாவட்டம் பூனாச்சி, காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு, திருமுக்கூடல், தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி, திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி, அரியலூர் மாவட்டம் அய்யூர், நாகப்பட்டினம் மாவட்டம் நரிமணம், ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர், புதுக்கோட்டை மாவட்டம் புனல்குளம், திருவண்ணாமலை மாவட்டம் வரகூர், சேலம் மாவட்டம் கொளத்தூர் என 11 துணை மின் நிலையங்களையும், கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரியில் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகக் கட்டிடத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இவற்றின் மொத்த மதிப்பு 85 கோடியே 62 லட்சம் ரூபாய் ஆகும்.

அரியானா மாநிலம் பஞ்குலாவில் உள்ள பானு என்ற இடத்தில் 27.11.2015 முதல் 1.12.2015 வரை நடைபெற்ற அகில இந்திய காவல் பணித்திறனாய்வு போட்டியில், தமிழ்நாடு காவல்துறை அணி, 7 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்கள், என மொத்தம் 16 பதக்கங்களை வென்றது. இப்போட்டியில், தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், என மொத்தம் 57 லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகையும்; மேலும், காவல்துறையினருக்கான அறிவியல் சார்ந்த புலனாய்வுக்கான வெற்றிக்கோப்பை மற்றும் சிறந்த மோப்ப நாய்க்கான கோப்பைகளுக்கான பல்வேறு குழுப் போட்டியில், முதல் இடம் பெற்ற தமிழக காவல்துறை அணியினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் இடம் பெற்ற அணியினருக்கு தலா 30 ஆயிரம் ரூபாயும், என மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

இது தவிர, சிறந்த மாநில அணிக்கான ஆந்திர பிரதேச முதல் மந்திரின் கோப்பையை வென்ற தமிழ்நாடு காவல்துறை அணியில் பங்குபெற்ற 30 காவல்துறை வீரர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 15 லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும், தமிழ்நாடு காவல் துறை அணியின் 5 பயிற்சியாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் என மொத்தம் 30 காவல்துறை வீரர்கள் மற்றும் 5 பயிற்சியாளர்களுக்கு 79 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிசுத்தொகையாக வழங்கினார்.

Next Story