சூட்கேசில் கடத்தி வந்தார் கஞ்சாவுடன் சிக்கிய ஆந்திர பெண் கைது


சூட்கேசில் கடத்தி வந்தார் கஞ்சாவுடன் சிக்கிய ஆந்திர பெண் கைது
x
தினத்தந்தி 7 Aug 2018 12:11 AM GMT (Updated: 2018-08-07T05:41:05+05:30)

ஆந்திராவில் இருந்து சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த போரூர் சிக்னல், ஆற்காடு சாலையில் ஆட்டோவில் வந்து இறங்கிய பெண் ஒருவர் கையில் சூட்கேசுடன் அங்குள்ள விடுதியில் அறை எடுத்து தங்குவதற்காக சென்றார்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த பெண்ணிடம் சூட்கேசை கேட்டு தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்க பொதுமக்கள் கூடியதால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கையில் மாட்டியிருந்த இரும்பு வளையத்தை எடுத்து அந்த பெண்ணின் முகத்தில் கிழித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதையடுத்து, பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது பற்றி தகவல் தெரியவந்ததும் வளசரவாக்கம் உதவி கமிஷனர் சம்பத், இன்ஸ்பெக்டர் முத்துராஜா ஆகியோர் தலைமையில் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா (வயது 23) என்பதும், அவர் வைத்திருந்த சூட்கேசில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தனக்கும் அந்த சூட்கேசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தான் ஒரு பட்டதாரி என்றும் தெரிவித்தார்.

இருப்பினும் போலீசாருக்கு அந்த பெண்ணின் மீதான சந்தேகம் விலகாததால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ரேணுகா ஏற்கனவே ஆந்திரா போலீசாரால் 2 முறை கைது செய்யப்பட்டவர்.

ரேணுகா அடைக்கப்பட்டிருந்த அதே சிறையில் சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான முத்துலட்சுமி (65) என்பவரும் அடைக்கப்பட்டிருந்தார். இவர் ஆந்திராவில் கஞ்சா வாங்க சென்றபோது ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்.

சிறையில் இருந்தபோது ரேணுகாவிற்கும், முத்துலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். ரேணுகா வழக்கில் சிறைக்கு சென்றதால் அவருடைய பெற்றோர் அவரை வீட்டில் சேர்த்துக்கொள்ளவில்லை. இதனால் முத்துலட்சுமி, ரேணுகாவை சென்னைக்கு அழைத்து வந்து பெரும்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தங்கவைத்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான தேவசகாயத்துக்கும், ரேணுகாவுக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து அவர்கள் இருவருக்கும் முத்துலட்சுமி திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை.

ரேணுகாவிற்கு சொந்த ஊர் ஆந்திர மாநிலம் என்பதால் அங்கிருந்து சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வர தேவசகாயத்துக்கு அவர் உதவியாக இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் தேவசகாயம் மூலம் பழக்கமான நிர்மல்குமார் என்பவருக்கும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கொடுத்துள்ளார்.

கஞ்சா வியாபாரத்தை காரணம் காட்டி நிர்மல்குமார் உள்பட பல ஆண்களுடன் ரேணுகா பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தேவசகாயம், ரேணுகாவுடன் சண்டை போட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றினார். இதையடுத்து ரேணுகா நிர்மலுடன் கைகோர்த்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்துள்ளார். இதில் ரேணுகாவிற்கு அதிகளவில் பணம் கிடைத்தது.

இதையடுத்து கடந்த 4-ந்தேதி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சூட்கேசில் வைத்துக்கொண்டு தனியார் சொகுசு பஸ்சில் வந்த ரேணுகா நேற்று முன்தினம் காலை சோழிங்கநல்லூரில் வந்து இறங்கினார். கஞ்சாவை வாங்குவதற்காக நிர்மல்குமார் அங்கு வர தாமதம் ஆனதால் ரேணுகா அங்கு காத்துக்கொண்டிருந்தார்.

அப்போது கார் மற்றும் மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் ரேணுகாவை காரில் ஏறும்படி கூறி உள்ளனர். இதில் பதறிப்போன ரேணுகா கூச்சல் போட்டதால் அங்கு பொதுமக்கள் கூட ஆரம்பித்ததையடுத்து அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து ரேணுகா செம்மஞ்சேரி போலீசில், மர்ம நபர்கள் தன்னை கடத்த முயன்றதாக புகார் அளித்ததார். ஆனால் அப்போது போலீசார் அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்யவில்லை.

பின்னர் ரேணுகா செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இருந்து ஆட்டோ மூலம் போரூருக்கு வந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அதே மர்ம கும்பல் ரேணுகாவிடம் கஞ்சா சூட்கேசை பறிக்க முயன்றனர். அப்போது பொதுமக்கள் கூடியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ரேணுகாவை தாக்கிவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர்.

ரேணுகா தன்னிடம் இருந்து பிரிந்து சென்று தனக்கு போட்டியாக கஞ்சா தொழில் செய்வதால் அவரது கணவர் தேவசகாயமே ஆள் வைத்து ரேணுகாவை கடத்தி கஞ்சாவை பறிக்க முயற்சி செய்தாரா? அல்லது தொழில் போட்டியில் வேறு யாராவது ரேணுகாவை கடத்த முயற்சி செய்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. தேவசகாயம் மற்றும் நிர்மல்குமாரை கைது செய்ய போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரேணுகாவிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ள போலீசார் அவரை போதை தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர். அதனை தொடர்ந்து இந்த கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளவர்கள் யார்? யார்? என்பது முழுமையாக தெரியவரும் என கூறப் படுகிறது.

Next Story