சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ம.க. நேரில் கோரிக்கை


சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ம.க. நேரில் கோரிக்கை
x
தினத்தந்தி 7 Aug 2018 12:13 AM GMT (Updated: 2018-08-07T05:43:47+05:30)

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மண்டல் ஆணையப் பரிந்துரைகள் தொடர்பான இந்திரா சகானி வழக்கில் கடந்த 1992-ம் ஆண்டு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது. அதனால் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட போது, அதை பாதுகாப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு 1994-ம் ஆண்டு அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது. அதன் மூலம் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஏற்பட்ட ஆபத்து தடுக்கப்பட்டது. ஆனால் இப்போது அதற்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உறுதி செய்யப்படவில்லை என்றும், 1985-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அம்பாசங்கர் தலைமையிலான இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முடிவுகளைக் கொண்டு 69 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி 2012-ம் ஆண்டில் வாய்ஸ் அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கையும் நடத்தாமல் நிலுவையில் வைத்துக்கொண்டே, மருத்துவ படிப்பில் 19 சதவீத கூடுதல் இடங்களை உருவாக்கி அதை ஒரு பிரிவினர் அனுபவித்து வந்தனர். ஆனால், இந்த ஆண்டு 19 சதவீத கூடுதல் இடங்களை ஏற்படுத்தும்படி ஆணையிட மறுத்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அப்துல் நஸீர் ஆகியோர் கொண்ட அமர்வு, 69 சதவீத இடஒதுக்கீடு செல்லுமா, செல்லாதா? என்பது குறித்த வழக்கை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

69 சதவீத இடஒதுக்கீட்டை நாம் பாதுகாக்க வேண்டுமானால் தமிழகத்தில் இடஒதுக்கீடு பெறும் சாதிகளின் மக்கள் தொகை தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 69 சதவீதத்துக்கும் அதிகம் என்பதை உறுதி செய்யத்தக்க புள்ளி விவரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.

இந்த சூழலில் தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி அதில் தமிழகத்தில் இடஒதுக்கீட்டு பிரிவினரின் அளவை உறுதி செய்ய வேண்டும். முந்தைய ஆட்சிகளில் நடத்தப்படாத சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உங்கள் தலைமையிலான அரசு செய்து சமூகநீதியை பாதுகாக்க வேண்டும்.

மொத்தம் 6 கோடி மக்கள் தொகையும், 1.35 கோடி குடும்பங்களையும் கொண்ட கர்நாடகத்தில் 45 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் 55 வினாக்கள் எழுப்பப்பட்டன. இந்த பணியில் மொத்தம் 1.60 லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக ஒட்டுமொத்தமாக ரூ.147 கோடி மட்டும் தான் கர்நாடகம் செலவிட்டது. இதை நாமும் பின்பற்றலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story