அலுவலக நேரத்திற்கு முன்பாகவே ஏராளமானோர் வீடுகளுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்


அலுவலக நேரத்திற்கு முன்பாகவே ஏராளமானோர் வீடுகளுக்கு செல்வதால் சென்னையில்  கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 7 Aug 2018 1:01 PM GMT (Updated: 7 Aug 2018 1:01 PM GMT)

அலுவலக நேரத்திற்கு முன்பாகவே ஏராளமானோர் வீடுகளுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று விசாரித்து செல்கின்றனர். இதற்கிடையே கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ள நிலையில், காவேரி மருத்துவமனை சார்பில் இன்று வெளியான அறிக்கையில்,  கருணாநிதியின் உடல் நிலை கடந்த சிலமணி நேரங்களாக மிக மோசமான பின்னடைவைச் சந்தித்து வருகிறது. முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டில் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிகபட்ச மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவருடைய உடல் உறுப்புகள் செயல்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. அவரது உடல்நிலை தொடர்ந்து மிகவும் கவலைக்கிடமாகவும், சீரற்ற நிலையிலும் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியானதைத்தொடர்ந்து, மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து தொண்டர்கள் வருகை அதிகமாக இருப்பதால், 8 துணை ஆணையர்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  மருத்துவமனைக்கு வெளியில் காத்திருப்பவர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். மருத்துவமனை முன்பு கூடியுள்ள தொண்டர்கள் கண்ணீருடன் எழுந்து வா தலைவா. எழுந்து வா தலைவா என கோஷம் எழுப்பி வருகின்றனர். காவேரி மருத்துவமனைக்கு 50-க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மண்டல காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், எஸ்பிக்கள், ஆணையர்களுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்து உள்ளார். 

அலுவலக நேரத்திற்கு முன்பாகவே ஏராளமானோர் வீடுகளுக்கு செல்வதால் சென்னையின் பெரும்பாலான இடங்களில்  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்து முடங்கியுள்ள பகுதிகளில், போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Next Story