ஒருமுறை கூட தேர்தலில் தோல்வியடையாத கருணாநிதி 13 முறை எம்.எல்.ஏ


ஒருமுறை கூட தேர்தலில்  தோல்வியடையாத  கருணாநிதி  13 முறை எம்.எல்.ஏ
x
தினத்தந்தி 7 Aug 2018 1:49 PM GMT (Updated: 7 Aug 2018 1:49 PM GMT)

13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.


சென்னை

* சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

* 1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

* 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.

* கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

* கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

* தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

* முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

* இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

* இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

* 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது. சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

* 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார். தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

* 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

* கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

*  எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

* ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

* 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

* தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

*  தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

* 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

*  2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

Next Story