கோபாலபுரம் செல்கிறது கருணாநிதி உடல்: சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறல்


கோபாலபுரம் செல்கிறது கருணாநிதி உடல்: சாலையின் இருபுறங்களிலும் குவிந்துள்ள திமுக தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறல்
x
தினத்தந்தி 7 Aug 2018 4:04 PM GMT (Updated: 7 Aug 2018 4:04 PM GMT)

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லபபடுகிறது. #RIPKalaignar #RIPKarunanidhi

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். 

 இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழி நெடுக தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்த படி கருணாநிதியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்படுகிறது. ஆம்புலன்சின் இருபுறமும் நிற்கும் ஏரளமான திமுக தொண்டர்கள், தங்கள் தலைவர் உடலை கண்டு கண்ணீர் விட்ட படியே ஆம்புலன்சை பின் தொடர்கின்றனர்.

கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்படும் கருணாநிதியின் பூத உடலுக்கு  நள்ளிரவு 1 மணி வரையிலும், சிஐடி காலனியில் அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர், அதிகாலை  4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story