கோபாலபுரம் இல்லத்திற்கு கருணாநிதி உடல் கொண்டு வரப்பட்டது: உடலைக்கண்டு தொண்டர்கள் கண்ணீர்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வந்தடைந்தது. கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்கள் கண்ணீர் மல்க குவிந்துள்ளனர். #RIPKalaignar #RIPKarunanidhi
சென்னை,
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.
இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. ஆம்புலன்சின் இருபுறமும் நிற்கும் ஏரளமான திமுக தொண்டர்கள், தங்கள் தலைவர் உடலை கண்டு கண்ணீர் விட்ட படியே ஆம்புலன்சை பின் தொடர்ந்து சென்றனர்.
இரவு 10.20 மணியளவில் கருணாநிதியின் உடலை சுமந்து வந்த ஆம்புலன்ஸ் கோபாலபுரம் வந்தடந்தது. கருணாநிதியின் உடல் கோபாலபுரம் வந்ததும், கோபாலபுரத்தில் கூடியிருந்த தொண்டர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இதையடுத்து, கருணாநிதியின் உடல் ஆம்புலன்ஸில் இருந்து இறக்கப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில், குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 1 மணி வரை கோபாலபுரத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதன்பிறகு, சிஐடி காலனிக்கு கருணாநிதியின் பூத உடல் எடுத்துச்செல்லப்பட்டு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர், அதிகாலை 4 மணி முதல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட்டு கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story