தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை காண சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி - தள்ளு முள்ளு


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை காண சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி - தள்ளு முள்ளு
x
தினத்தந்தி 7 Aug 2018 8:55 PM GMT (Updated: 2018-08-08T02:25:29+05:30)

தங்கள் தலைவரை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயற்சி செய்ததால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. #Karunanidhi #RIPKarunanidhi

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

இந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்,  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். இறுதியாக ஒரு முறை தங்கள் தலைவரை பார்த்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் சிஐடி காலனி வீட்டிற்குள் செல்ல தொண்டர்கள் முயன்றனர். இதனால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது. தடுப்பை மீறி முன்னேற முயன்றதால் தொண்டர்கள் மீது லேசான தடியடி நடத்தப்பட்டது. தொண்டர்கள் அதிக அளவில் திரண்டிருப்பதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story