மாநில செய்திகள்

அரசுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று அபகரிக்க முயற்சி + "||" + Trying to get rid of the state-owned 50 acres of land illegally

அரசுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று அபகரிக்க முயற்சி

அரசுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று அபகரிக்க முயற்சி
சிறுபாக்கம் அருகே அரசுக்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா பெற்று, அந்த இடத்தை சீரமைத்து அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
சிறுபாக்கம், 


சிறுபாக்கம் அடுத்த மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது மா.குடிகாடு கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 600 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்துக்கு தென்புறம் அரசுக்கு சொந்தமாக சுமார் 100 ஏக்கர் காலி இடம் உள்ளது.

இந்த நிலையில், தனிநபர் சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தில் கிடந்த செடிகளை அகற்றினர். இதை பார்த்து சந்தேகமடைந்த கிராம மக்கள், அவர்களிடம் சென்று, ஏன் இந்த இடத்தை சுத்தம் செய்கிறீர்கள் என்று கேட்டனர். அப்போது அவர்கள் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது, பட்டா பெற்று இருப்பதாகவும் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், அவர்களை தடுத்து நிறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி, விருத்தாசலம் கோட்டாட்சியர் சந்தோஷினி சந்திராவிடம் கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில், வேப்பூர் தாசில்தார் செந்தில் குமார், வருவாய் ஆய்வாளர் வெற்றிசெல்வன், தலைமை நிலைய நில அளவர் நந்தகோபால், கிராம நிர்வாக அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நலைய பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்கிருந்த 100 ஏக்கர் நிலத்தில் சுமார் 50 ஏக்கர் நிலத்திற்கு விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் சிறுபாக்கம் பகுதியை சேர்ந்த சிலர், அவர்களது குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரில் முறைகேடாக பட்டா பெற்று இருப்பதுடன், தற்போது அந்த இடத்தை அபகரிப்பு செய்யும் வகையில் பொக்லைன் எந்திரத்தை கொண்டு சீரமைத்தது தெரியவந்து. அதாவது, 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே வருவாய் ஆவணங்களை திருத்தி, முறைகேடாக பட்டா பெற்று இருக்கிறார்கள்.தொடர்ந்து, அந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், இடத்தை உரிமை கொண்டாடியவர்களிடம் இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது பட்டா யார் மூலமாக பெறப்பட்டது என்பது குறித்த விவரத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே நிலத்தின் பட்டாவை கொண்டு வங்கிகளில் கடன் உதவி பெற்று இருக்கிறார்களா என்றும், இதன் பின்னணியில் யார்? யார்? உள்ளனர் என்றும் வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், முறைகேடாக பெற்ற பட்டாவை ரத்து செய்வதுடன், இதுகுறித்து விசாரணை நடத்தி அரசுக்கு சொந்தமான நிலத்தை அபகரிக்க முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் துறையினரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் கிராம மக்கள் அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதிகம் வாசிக்கப்பட்டவை