தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல்


தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல்
x
தினத்தந்தி 8 Aug 2018 2:42 AM GMT (Updated: 2018-08-08T08:12:49+05:30)

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்க வீடியோவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.  அவரது உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு உள்ளது.  தொடர்ந்து ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது.

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தலைமை செயலகத்தில் அரைகம்பத்தில் தேசியக்கொடி பறக்க விடப்பட்டு உள்ளது.

அவரது உடல் வைக்கப்பட்டு உள்ள கண்ணாடி பேழை அருகே, தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தி இடம்பெற்ற இன்றைய முரசொலி நாளிதழ் வைக்கப்பட்டு உள்ளது.  மறைந்த கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தொண்டர்கள் மற்றும் மக்கள் குவிந்து உள்ளனர்.  அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா மற்றும் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.  அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு செய்தி அறிந்து தனது இரங்கல் செய்தியை அமெரிக்காவில் இருந்தபடி வீடியோவில் வெளியிட்டு உள்ளார்.

அதில், கருப்பு சட்டை அணிந்தபடி அவர் பேசும்பொழுது, கருணாநிதி மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.  அமெரிக்காவில் இருந்தபொழுதும் என்னுடைய எண்ணங்களும், நினைவுகளும் கருணாநிதியுடனேயே உள்ளது என கூறினார்.

தொடர்ந்து அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் வீடியோவை பாதியிலேயே நிறுத்தும்படி விஜயகாந்த் கண்ணீர் மல்க கூறுகிறார்.


Next Story