கருணாநிதி ஓய்வு முதல்... மறைவு வரை...


கருணாநிதி ஓய்வு முதல்... மறைவு வரை...
x
தினத்தந்தி 8 Aug 2018 7:31 AM GMT (Updated: 2018-08-08T13:01:07+05:30)

.

* தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி முதன்முதலில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடலில் சிவப்பு நிறத்திலான கொப்புளங்கள் ஏற்பட்டதால், அதற்காக சிகிச்சை பெற்றார்.

* அக்டோபர் 26-ந் தேதி தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க வருவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

* அக்டோபர் 29-ந் தேதி கருணாநிதியின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து டாக்டர்கள் வீட்டிற்கே வந்து சிகிச்சை அளித்தனர்.

* தொடர்ந்து வீட்டிலேயே சிகிச்சை பெற்ற அவர் டிசம்பர் மாதம் 1-ந் தேதி நீர்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

* டிசம்பர் 7-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

* டிசம்பர் 15-ந் தேதி இரவு கருணாநிதிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

* டிசம்பர் 16-ந் தேதி கருணாநிதியின் தொண்டை பகுதியில் ‘டிரக்கியாஸ்டமி’ செயற்கை சுவாச குழாய் பொருத்தப்பட்டது.

* 9 நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெற்ற கருணாநிதி அதே மாதம் 23-ந் தேதி மாலை வீடு திரும்பினார்.

* அன்று முதல் கடந்த 1½ ஆண்டுகளாக சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார்.

* கடந்த மாதம் (ஜூலை) 18-ந் தேதி கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ‘டிரக்கியாஸ்டமி’ செயற்கை சுவாசக் குழாய் மாற்றப்பட்டது. இதற்காக, காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்த அவர், அன்று மாலையே சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

* வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த நிலையில், ஜூலை 24-ந் தேதி கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டிற்கே மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

* கருணாநிதியின் உடல்நிலையில் 27-ந் தேதி சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அன்று இரவு மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இரவோடு இரவாக அவர் காவேரி ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் வேன் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

* 28-ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கருணாநிதி உடல்நிலை தொடர்பாக முதல் அறிக்கையை காவேரி ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டது. அதில், சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை, ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

* 28-ந் தேதி இரவு 8 மணிக்கு காவேரி ஆஸ்பத்திரி நிர்வாகம் 2-வது மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. அதில், தொடர் சிகிச்சையின் மூலம் உடல்நிலை, ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

* 29-ந் தேதி இரவு 9.30 மணிக்கு வெளியிட்ட தனது 3-வது அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் சீரானது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

* 31-ந் தேதி மாலை 6.30 மணிக்கு காவேரி ஆஸ்பத்திரி வெளியிட்ட 4-வது அறிக்கையில், வயது மூப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் கருணாநிதி சிறிது நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

* தொடர்ந்து ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு கடந்த 4-ந் தேதி மஞ்சள்காமாலை அறிகுறி தென்பட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

* 5-ந் தேதி இரவு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

* நேற்று முன்தினம் (6-ந் தேதி) காலை கருணாநிதியின் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

* நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு காவேரி ஆஸ்பத்திரி 5-வது மருத்துவ அறிக்கையை வெளியிட்டது. அதில், “முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை பராமரிப்பதில் சவாலான நிலையே தொடர்கிறது. இந்த மருத்துவ சிகிச்சையை அடுத்த 24 மணி நேரத்தில், அவரது உடல் எவ்வாறு ஏற்கிறது என்பதை வைத்துத்தான் நோயில் இருந்து அவர் மீள்வதை தீர்மானிக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

* தொடர்ந்து கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில், நேற்று மாலை 4.30 மணிக்கு காவேரி ஆஸ்பத்திரி வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவும், சீராக இல்லாமலும் இருக்கிறது” என்று கூறப்பட்டிருந்தது.

* இறுதியாக மாலை 6.40 மணிக்கு வெளியான காவேரி ஆஸ்பத்திரியின் மருத்துவ அறிக்கையில், “தி.மு.க. தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணிக்கு காலமானார்” என்ற செய்தி இடம் பெற்றிருந்தது. 

Next Story