திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்


திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் ஒப்பாரி வைத்து கதறி அழுத பெண்கள்
x
தினத்தந்தி 8 Aug 2018 9:48 PM GMT (Updated: 8 Aug 2018 9:48 PM GMT)

திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீட்டில் பெண்கள் ஒப்பாரி வைத்து கதறி அழுதனர்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊர் ஆகும். இந்த ஊரில் தற்போது கருணாநிதியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் வசித்து வருகிறார்கள். கருணாநிதி பிறந்த வீடு நூலகமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

கருணாநிதி மறைவால் தற்போது திருக்குவளை கிராமம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி உள்ளது. கருணாநிதி பிறந்த வீட்டின் முன்பு நேற்று முன்தினம் பொதுமக்கள் திரண்டு வந்து அவருடைய படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நேற்றும் திரளான மக்கள் வந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டம் அதிகரித்ததால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

கருணாநிதி வீட்டின் முன்பு பெண்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து கதறி அழுதனர். அப்போது துக்கம் தாங்க முடியாமல் ஒரு பெண் மயங்கி விழுந்தார். உடனே மற்ற பெண்கள் அவருடைய மயக்கத்தை தெளிய வைத்தனர்.

திருக்குவளை பகுதியில் தி.மு.க. தொண்டர்கள் ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களில் கருணாநிதி படத்தை வைத்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக சென்று தங்களது இரங்கலை தெரிவித்தனர். திருக்குவளையை சுற்றி உள்ள பகுதிகளில் கடைகள், முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன. தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து மவுன ஊர்வலம் சென்றனர்.

கருணாநிதி உடலை சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய நேற்று ஐகோர்ட்டு அனுமதி அளித்ததால் மகிழ்ச்சி அடைந்த தி.மு.க.வினர், கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று பேனர்கள் வைத்திருந்தனர்.

Next Story