மாநில செய்திகள்

கருணாநிதி மறைவுக்கு வைகோ, இலங்கை மாகாண முதல்-மந்திரி விக்னேசுவரன் இரங்கல் + "||" + Vaiko for the death of Karunanidhi, Sri Lanka Provincial Chief Minister of Vigneswaran

கருணாநிதி மறைவுக்கு வைகோ, இலங்கை மாகாண முதல்-மந்திரி விக்னேசுவரன் இரங்கல்

கருணாநிதி மறைவுக்கு வைகோ, இலங்கை மாகாண முதல்-மந்திரி விக்னேசுவரன் இரங்கல்
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு வைகோ, இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேசுவரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு வைகோ, இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேசுவரன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:-

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ: இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது நீக்கமற நிறைந்து போராட்ட களத்தில் என்னை வார்ப்பித்து என் ஊனோடும், உயிரோடும், உதிர அணுக்களோடும் நிறைந்த பெருந்தகை கருணாநிதி. பொதுவாழ்வில் இந்த எளியேனுக்கு முகவரி தந்த முத்தமிழ் அறிஞர். செயல் தலைவருக்கு கவசமாகவும், அரணாகவும் தோள்கொடுப்பேன் என்று அடியேன் சொன்னதை கேட்டு உங்கள் முகத்தில் தவழ்ந்த புன்முறுவலை நான் எப்படி மறப்பேன்.


உங்கள் மீது துரும்பு விழுந்தாலும் துடிதுடித்து வெகுண்டு எழும் என்போன்ற லட்சோப லட்ச தம்பிமார்களின் கரங்கள் உங்களை காவு கொண்ட கூற்றுவனை தடுக்க முடியவில்லையே என நெஞ்சம் துடிக்கிறது. நீங்கள் உயிரினும் மேலாக காத்து வளர்த்த தி.மு.க.வுக்கும், தலைமை தாங்கிடும் தளபதிக்கும் அரணாக கடமையாற்ற சூளுரைத்து பொங்கிவரும் கண்ணீரை இரங்கலாக அர்ப்பணிக்கிறேன். ம.தி.மு.க கொடிகள் 7 நாட்கள் அரை கம்பத்தில் பறந்து கருணாநிதிக்கு தலைவணக்கம் செய்யும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்: கருணாநிதிக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 7 நாட்கள் துக்கம் கடைபிடிக்கிறது. இந்த 7 நாட்களும் கட்சியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட வேண்டும் என்றும், கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்படுகிறது. வருகிற 17-ந் தேதி தமிழர் எழுச்சி நாள் அன்று ஒரு லட்சம் பனைவிதைகள் நடுகிற செயல்திட்டத்தை தவிர பிற விழாக்கள் அனைத்தையும் 15 நாட்களுக்கும் தள்ளிவைக்குமாறு கட்சி நிர்வாகிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேசுவரன்: கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு தமிழ்கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இலங்கை தமிழர்களுக்காக போராடியவர் கருணாநிதி. தனது வாழ்வை தமிழர் வரலாற்றின் அத்தியாயங்களாக பதிவு செய்து விட்டு மறைந்துள்ள கருணாநிதியின் ஆத்மா சாந்தி அடைய இலங்கை தமிழ் மக்களின் சார்பில் வேண்டுகிறேன். அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும், லட்சோப லட்சம் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். கன்னியாகுமரியில் வானுயர அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை போன்று கருணாநிதியின் பெயரும் காலா காலத்துக்கும் நிலைத்திருக்க இறைவன் அருள்புரிய வேண்டும்.

இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் வி.அன்பழகன், தமிழ்நாடு இளைஞர்கள் சங்க தலைவர் எம்.எம்.ஆர்.மதன், தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் மயில், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன், தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி இளைஞர் அணி செயலாளர் சமயசெல்வம், தமிழ்நாடு தொழில் வல்லுனர் காங்கிரஸ் தலைவர் மோகன்குமாரமங்கலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மணி, இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர்அலி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை நிறுவனர் பொதுச்செயலாளர் வீர.வன்னியராஜா, தமிழ்நாடு அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் அமலராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.