மாநில செய்திகள்

கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி: நடிகர்-நடிகைகளும் திரண்டனர் + "||" + Karunanidhi's body Political leaders shouted: Actor-actresses gathered

கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி: நடிகர்-நடிகைகளும் திரண்டனர்

கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி: நடிகர்-நடிகைகளும் திரண்டனர்
சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்ட கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்பட திரையுலக பிரமுகர்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் கடந்த 27-ந்தேதி நள்ளிரவு சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். 11 நாட்களாக தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் கருணாநிதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடல் பதப்படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் வேன் மூலம் கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தொண்டர்களும் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நள்ளிரவு 1.40 மணிக்கு அவரது உடல் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது மகள் கனிமொழி எம்.பி. இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு கருணாநிதி உடல் அதிகாலை 5 மணி வரை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் உள்பட பலர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கருணாநிதி உடல் ஆம்புலன்சு வேனில் ஏற்றப்பட்டு, ராஜாஜி அரங்கத்துக்கு காலை 5.40 மணியளவில் கொண்டு வரப்பட்டது. முப்படை சார்பில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, அவரது உடலில் மூவர்ண தேசியக்கொடி போர்த்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கருணாநிதி உடல் கண்ணாடி பெட்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ராஜாஜி அரங்குக்கு வந்து கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் மு.க.ஸ்டாலினை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற சபாநாயகர் ப.தனபால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, காமராஜ், எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி நகர் சத்யா, விருகை ரவி ஆகியோர் நேற்று காலை 6.53 மணியளவில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மு.க.ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா, மகள் சவுந்தர்யா, மருமகன் நடிகர் தனுஷ் ஆகியோருடன் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜனும் நேரில் வந்து கருணாநிதி உடலுக்கு மலர் வளையம் வைத்து காலை 6.15 மணியளவில் அஞ்சலி செலுத்தினார்.

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரிக்கு ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் சபாநாயகர்கள் சேடப்பட்டி முத்தையா, ஆவுடையப்பன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்த தொண்டர்கள் என ஏராளமானோர் கருணாநிதி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொருளாளர் நாசே ராமச்சந்திரன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, செய்தி தொடர்பாளர் கோபண்ணா, எம்.ஜி.ஆர். கழக நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன், உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, அவரது மனைவி ரேணுகாதேவி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி டாக்டர் சவுமியா,

பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி., தேசிய செயலாளர் எச்.ராஜா, பொதுச்செயலாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா.பாண்டியன், மாநில செயலாளர் இரா.முத்தரசன், டி.ராஜா எம்.பி., திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், மூத்த துணை தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்,

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பச்சைமுத்து மற்றும் ரவி பச்சைமுத்து, சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, தனியரசு எம்.எல்.ஏ., அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், ஆத் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், எம்.ஜி.ஆர். அம்மா, தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா, அவரது கணவர் மாதவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் ஹைதர் அலி உள்பட அரசியல் கட்சியினர் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் ராஜேஷ், கருணாஸ், பொன்வண்ணன், மோகன், பசுபதி, பரணி, உதயா, வெங்கடேஷ், ஸ்ரீமன், பிரேம், ஹேமச்சந்திரன், அயூப்கான், நடிகைகள் காஞ்சனா, சச்சு, செம்மீன் ஷீலா, குட்டி பத்மினி, கோவை சரளா, சங்கீதா, சோனியா அகர்வால், லலிதாகுமாரி உள்ளிட்டோர் திரண்டு வந்து கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நடிகர்கள் சிவகுமார், அஜித்குமார், அவரது மனைவி ஷாலினி, சூர்யா, சிவகார்த்திக்கேயன், விஜய் சேதுபதி, பிரபு, சத்யராஜ், விக்ரம் பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், பிருத்விராஜ், பிரசன்னா, சூரி, பரத், சிபி ராஜ், விமல், அதர்வா, நந்தா, ராதாரவி, கவுண்டமணி, வடிவேலு, விவேக், ரமணா, சாந்தனு, சக்தி, எஸ்.வி.சேகர், சந்தான பாரதி, மயில்சாமி, மன்சூர் அலிகான், ரகுமான்கான், ஆனந்த் பாபு, வையாபுரி, பவர் ஸ்டார் சீனிவாசன்,

கவிஞர்கள் வைரமுத்து, மகன் கபிலன், பா.விஜய், சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன், நடிகைகள் சரோஜாதேவி, ஸ்ரீபிரியா, குஷ்பு, சினேகா, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி, லிசி, இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, பாக்யராஜ், எஸ்.ஏ.சந்திரசேகர், டி.ராஜேந்தர், லிங்குசாமி, பாண்டிராஜ், வசந்த், கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர்கள் சங்கர் கணேஷ், தேவா, ஸ்ரீகாந்த் தேவா, தீனா, தஷி, திரைப்பட தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கே.டி.குஞ்சுமோன், பிரமீட் நடராஜன், சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு, ‘கில்டு’ தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்பட திரையுலகினரும் கருணாநிதி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் சந்திரமோகன், விக்ரம் கபூர், ஆலிவர், அதுல்யா மிஸ்ரா, ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ஜாங்கிட், சைலேந்திர பாபு, ரவி, ஷகீல் அக்தர், பவானீஸ்வரி, முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண், ககன்தீப்சிங் பேடி,

வி.ஜி.பி. குழும தலைவர் வி.ஜி.சந்தோசம், இந்தியா சிமெண்ட்ஸ் அதிபர் சீனிவாசன், டி.வி.எஸ். வேணு சீனிவாசன், பழனி ஜி பெரியசாமி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் எம்.கே.சுரப்பா, வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், ஆர்.எம்.டி. கல்வி குழு தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், டாக்டர் கமலா செல்வராஜ், நக்கீரன் கோபால், இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவஹர், எழுத்தாளர் பழ.கருப்பையா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி நிலைய மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ) டாக்டர் இளங்கோ, முன்னாள் நீதிபதி கோகுலகிருஷ்ணன் உள்பட ஏராளமானோரும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு விவசாய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ஆர்.பாண்டியன், சென்னைவாழ் காவிரி மைந்தர்கள் அமைப்பின் தலைவர் அசோக் லோதா, சென்னை-மயிலை மறைமாவட்ட பேராயர் எஸ்.ஜார்ஜ் அந்தோணிசாமி, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோரும் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிற்பகல் 3.55 மணி வரை கருணாநிதி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.