ஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை


ஜெயலலிதா - கருணாநிதிக்கு ஒரே மாதிரி சந்தனப் பேழை
x
தினத்தந்தி 8 Aug 2018 11:01 PM GMT (Updated: 8 Aug 2018 11:55 PM GMT)

ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரே மாதிரியான சந்தனப் பேழையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், “கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியின் உடல் அதில் வைக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்’ நிறுவனமே வடிவமைத்திருந்தது.

Next Story