இட ஒதுக்கீட்டுக்காக போராடியவர்: கருணாநிதி உடலுக்கான இட ஒதுக்கீட்டை போராடி பெற்று இருக்கிறோம் - மு.க.ஸ்டாலின்


இட ஒதுக்கீட்டுக்காக போராடியவர்: கருணாநிதி உடலுக்கான இட ஒதுக்கீட்டை போராடி பெற்று இருக்கிறோம் - மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 8 Aug 2018 11:07 PM GMT (Updated: 8 Aug 2018 11:56 PM GMT)

இட ஒதுக்கீட்டுக்காக போராடிய திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கான இட ஒதுக்கீட்டை போராடி பெற்று இருக்கிறோம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டிருந்த வளாகம் முன்பு மக்கள் கூட்டம் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது போலீசார்-மக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்தநிலையில் தொண்டர்கள் மற்றும் மக்கள் முன்பு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். மக்களின் இட ஒதுக்கீட்டுக்காக குரல் கொடுத்து போராடியவர். ஆனால் அப்படி அரும்பாடுபட்ட அவரது உடலுக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் சென்று போராடி பெற்று இருக்கிறோம். கடுமையான இந்த சோகத்திலும், கருணாநிதியின் கனவு நிஜமாகியுள்ள உணர்வில் இருக்கிறோம்.

மெரினாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை விடுக்க சென்றபோது, ‘போக வேண்டாம். உங்கள் மரியாதை என்னாவது?’, என்று என்னிடம் கேள்வி எழுப்பினர். ‘எனக்கு எந்த பெருமையும் தேவையில்லை, தலைவருக்கு மரியாதை கிடைக்கவேண்டும்’ என்று கூறி கோரிக்கை விடுக்க சென்றேன். ஆனால் மெரினாவில் இடம் தரமுடியாது என்று திட்டவட்டமாக முதல்-அமைச்சர் சொல்லிவிட்டார். அதை இப்போது தவிடுபொடியாக்கி இருக்கிறோம். வெற்றி பெற்று இருக்கிறோம்.

எனவே கருணாநிதியால் உருவாக்கப்பட்ட நான், உங்களில் ஒருவனாக கேட்கிறேன், உங்கள் கால்களை தொட்டு வணங்கி கேட்கிறேன், ஒரு பெரிய கலவரத்துக்கு ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள். நாம் அதற்கு எந்தவகையிலும் இடம் தரக்கூடாது. போலீஸ் பாதுகாப்பு இருக்கிறதோ, இல்லையோ நாம் எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது. அமைதியாக கலைந்து செல்லவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story