பதவியில் இருந்தபோது மரணம் அடைந்த 3 முதல்-அமைச்சர்களுடன் மெரினாவில் இணைந்த கருணாநிதி


பதவியில் இருந்தபோது மரணம் அடைந்த 3 முதல்-அமைச்சர்களுடன் மெரினாவில் இணைந்த கருணாநிதி
x
தினத்தந்தி 8 Aug 2018 11:18 PM GMT (Updated: 2018-08-09T05:28:59+05:30)

பதவியில் இருந்தபோது மரணம் அடைந்த 3 முதல்-அமைச்சர்களுடன் மெரினாவில் கருணாநிதியும் இணைந்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தபோதும் இந்த கவுரவம் அவருக்கு கிடைத்துள்ளது.

சென்னை,

நீண்ட நெடிய அரசியல் அனுபவம் உடைய தி.மு.க. தலைவரான கருணாநிதி, மறைந்த முதல்-அமைச்சர் அண்ணாவை தனது ஆசானாக கருதினார். அவருடைய வழியில் நடக்கும் தம்பியாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு அரசியல் செய்தார்.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற எம்.ஜிஆர், அ.தி.மு.க.வை தொடங்கினார். அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆர். மற்றும் கருணாநிதி இடையே தனிப்பட்ட கருத்து மோதல்கள் இருந்தன.

ஆனாலும், 2 பேரும் நல்ல நண்பர்களாக நட்பு பாராட்டி வந்தனர். எம்.ஜி.ஆருக்கு பின்னர் அ.தி.மு.க.வின் தலைமையை ஏற்ற ஜெயலலிதா தி.மு.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருந்தார். குறிப்பாக கருணாநிதிக்கு எதிராகவே அவர் அரசியல் செய்தார். தனிப்பட்ட முறையில் மரியாதை இருந்தாலும், 2 பேரும் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தனர்.

1967-ம் ஆண்டுக்கு பிறகு 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தை 6 முதல்-அமைச்சர்கள் ஆட்சி செய்திருக்கிறார்கள். அதாவது, அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, ஜானகி அம்மாள், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய 6 பேர் இந்த பதவியை வகித்துள்ளனர். இதில், முதல்-அமைச்சராக இருந்தபோது அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இறந்திருக்கின்றனர். இவர்கள் 3 பேரின் உடல்களுமே மெரினா கடற்கரையில் அருகருகே அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.

ஜானகி அம்மாள், கருணாநிதி ஆகியோர் முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தபோது மரணம் எய்தியிருக்கிறார்கள். ஆனால் ஆட்சியில் இல்லாதபோதும், அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய 3 முதல்-அமைச்சர்களுடன் மெரினாவில் தற்போது கருணாநிதியும் இணைந்துள்ளார். இதை கருணாநிதிக்கு கிடைத்த கவுரமாகவே தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கருதுகிறார்கள்.

Next Story