மறைவுக்கு பிறகு ஒற்றுமை காட்டும் கருணாநிதி, ஜெயலலிதா


மறைவுக்கு பிறகு ஒற்றுமை காட்டும்  கருணாநிதி, ஜெயலலிதா
x
தினத்தந்தி 9 Aug 2018 5:50 AM GMT (Updated: 9 Aug 2018 5:50 AM GMT)

கருணாநிதியும், ஜெயலலிதாவும் மறைந்த நாளின் கூட்டுத்தொகையில் உள்ள அதிசய ஒற்றுமை குறித்து தெரியவந்துள்ளது.


திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி மாலை 6.10 மணியளவில் காலமனார். தொடர்ந்து நேற்று மாலை அவரின் உடல் முப்படை அணிவகுப்புடனும் அடக்கம் செய்யப்பட்டது. 

 கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். அதாவது ஜெயலலிதா 05-12-2016 (2016+12+05=2033) அன்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். இதன் கூட்டுத்தொகை 2033 என்று வருகிறது. இதே போன்று, கருணாநிதிக்கும் 07-08-2018 (2018+08+07= 2033) கூட்டுத்தொகை 2033 என்று வருகிறது. வாழும் போது, அரசியலில் எதிரியாக இருந்த நிலையில் இறந்த பிறகு இருவருக்கும் ஒற்றுமை ஏற்பட்டு உள்ளது.

2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்தபோது, அவரது உடல் சந்தனப் பேழையில் வைத்து மெரினா கடற்கரையோரம் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

6 அடி நீளம், 2½ அடி அகலம் கொண்ட அந்த பெட்டியின் மேல் பகுதியில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் அதே வடிவமைப்பில் சந்தனப் பேழை 6 அடி நீளம், 2½ அடி அகலத்தில் தயாரிக்கப்பட்டிருந்தது. பெட்டியின் மேல் பகுதியில் ஒரு புறம், “கலைஞர் மு.கருணாநிதி, தி.மு.க. தலைவர், 3-6-1924 - 7-8-2018” என்று எழுதப்பட்டிருந்தது. மற்றொரு புறம், “ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ, ஓய்வு கொண்டிருக்கிறான்” என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியின் உடல் அதில் வைக்கப்பட்டு, மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் பின்புறம் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் ஒரேமாதிரி சந்தனப் பேழை வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2 சந்தனப் பேழைகளையும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ‘ஹோமேஜ்’ நிறுவனமே வடிவமைத்திருந்தது.

தமிழக முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் பதவி வகித்த ஜெயலலிதா 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இரவு மரணம் அடைந்தபோது, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில், அப்பல்லோ ஆஸ்பத்திரியில் இருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு சந்தனப் பேழையில் அவரது உடல் வைக்கப்பட்டு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டது.
அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவர், சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார் (வயது 58).

அதேபோல்  தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலை தங்க முலாம் பூசிய குளிர்சாதன கண்ணாடிப் பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கும், சி.ஐ.டி. காலனி இல்லத்துக்கும், தொடர்ந்து ராஜாஜி ஹாலுக்கும் ஓட்டிச்சென்றவர், பி.ஆர்.எம்.எம்.சாந்தகுமார்தான்.

புதிதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான ‘பிளையிங் ஸ்குவேர்டு’ ஆம்புலன்ஸ் வாகனம்தான், கருணாநிதியின் உடலை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்டது.

Next Story