கனமழையால் பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்


கனமழையால் பாதிப்பு: தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்
x
தினத்தந்தி 9 Aug 2018 9:45 PM GMT (Updated: 9 Aug 2018 9:37 PM GMT)

கேரளா மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழையால் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளா விரைந்தனர்.

அரக்கோணம்,
 
மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்பி வைக்க டெல்லியில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தை கேரளா அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து வேலூர் மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களை மீட்பு பணிக்கு செல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி 4 குழுவாக மொத்தம் 100 வீரர்கள் அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமானதளத்தில் இருந்து தனி விமானத்தில் கேரளாவுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். மேலும் சாலை வழியாக 60 வீரர்கள் கேரளா புறப்பட்டனர்.

மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், உயிர்காக்கும் கருவிகள், முதலுதவி பொருட்கள், மரம் அறுக்கும் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், நீளமான கயிறுகள் உள்ளிட்ட மீட்பு பொருட்களை உடன் எடுத்து சென்றனர். மறு அறிவிப்பு வரும் வரை வீரர்கள் கேரளாவில் தங்கி மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story