மாநில செய்திகள்

கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + From Karnataka Dams 1.15 lakh cubic feet Water opening State of the 6 districts Flood Risk Warning

கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடக அணைகளில் இருந்து 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகா, கேரளாவில் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ்., கபினி அணைகள் நிரம்பி தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
சேலம்,

கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரளாவின் வயநாடு மாவட்டத்திலும் கடந்த மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் கர்நாடகத்தின் முக்கிய அணைகளான கபினி, கே.ஆர்.எஸ். (கிருஷ்ணராஜசாகர்) ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.


இதன் காரணமாக கடந்த மாதம் 19-ந் தேதி இரு அணைகளும் நிரம்பின. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதன் காரணமாக தமிழகத்தின் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்ததால் கடந்த மாதம் 19-ந் தேதியில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் தண்ணீர் வந்ததால் ஜூலை 23-ந் தேதி மேட்டூர் அணையும் 120 அடியை எட்டி நிரம்பியது. கூடுதலாக வந்த தண்ணீர் காவிரியில் உபரியாகவும் திறக்கப்பட்டது.

அதன்பின்னர் கர்நாடகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை படிப்படியாக குறைந்தது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக இரு அணைகளில் இருந்தும் குறைவான அளவு நீர் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்துவருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நேற்று மாலை இரு அணைகளும் மீண்டும் நிரம்பின. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது.

கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் கர்நாடக பகுதியில் காவிரி, கபிலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவைவிட நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த 2-ந் தேதி 119.98 அடியாக குறைந்தது. தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து நேற்று காலை 117.51 அடியானது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக நேற்று மதியம் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 30,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதில் உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக வினாடிக்கு 7,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அதேசமயம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8,751 கனஅடியாக இருந்தது.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை தமிழக அரசுக்கும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு உத்தரவு அனுப்பியுள்ளது.

அதில், ‘கர்நாடகா மற்றும் கேரளாவில் பலத்த மழை பெய்வதால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 2 நாட்களில் மேட்டூர் அணைக்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் உரிய வெள்ள அபாய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி தெரிவிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

அதன்படி 6 மாவட்டங்களிலும் நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையின் 16 கண் பாலத்தையொட்டி அமைந்துள்ள பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருவாய்த்துறையினர் காவிரி கரையோரங்களில் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும், பரிசல்கள் வழக்கம்போல் இயங்கின.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட 1.15 லட்சம் கனஅடி தண்ணீர் இன்று (வெள்ளிக்கிழமை) மாநில எல்லையான பிலிகுண்டுலுவையும், நாளை (சனிக்கிழமை) மேட்டூர் அணையையும் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்துசேர்ந்ததும் மீண்டும் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது. 120 அடியை எட்ட 3 அடி மட்டுமே தேவையாக உள்ளதால் 2 நாளில் நிரம்பிவிடும் என கூறப்படுகிறது.