மாநில செய்திகள்

கருணாநிதி மறைவு: மு.க.ஸ்டாலினிடம் முக்கிய பிரமுகர்கள் துக்கம் விசாரிப்பு + "||" + Karunanidhi death To MK Stalin Key figures Mourning inquiry

கருணாநிதி மறைவு: மு.க.ஸ்டாலினிடம் முக்கிய பிரமுகர்கள் துக்கம் விசாரிப்பு

கருணாநிதி மறைவு: மு.க.ஸ்டாலினிடம் முக்கிய பிரமுகர்கள் துக்கம் விசாரிப்பு
கருணாநிதி மறைவையொட்டி மு.க.ஸ்டாலினிடம் முக்கிய பிரமுகர்கள் நேற்று துக்கம் விசாரித்தனர்.
சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 7-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் அவருடைய உடல் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சென்னை மெரினா கடற்கரையோரம் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் கருணாநிதி மறைவு குறித்து துக்கம் விசாரிக்க கோபாலபுரம் இல்லத்துக்கு நேற்று முக்கிய பிரமுகர்கள் வந்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 10.05 மணிக்கு கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தார். முன்னதாக தி.மு.க. நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, ஆ.ராசா உள்பட பலர் வந்திருந்தனர்.

தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செய்தனர். அதைத்தொடர்ந்து கருணாநிதியின் இறுதி சடங்கில் பங்கு பெறமுடியாதவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்திருந்தவர்கள் என பலரும் மு.க.ஸ்டாலினை சந்தித்து துக்கம் விசாரித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாலை முரசு நிர்வாக இயக்குனர் கண்ணன் ஆதித்தன், நடிகர்கள் ஜெயராம், நிழல்கள் ரவி, சென்னையில் இருக்கக்கூடிய இங்கிலாந்து நாட்டுக்கான துணைத்தூதர் பரத் ஜோஷி, சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன் உள்பட பலர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துக்கம் விசாரித்துவிட்டு சென்றனர்.

இதையடுத்து பிற்பகல் 2.10 மணியளவில் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். அப்போது காரில் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும் இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கருணாநிதி மரணம் அடைந்ததையொட்டி, அந்த பாதுகாப்பு படை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதேபோல், கருணாநிதிக்கு தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் (மாநில கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ்) பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களையும் வாபஸ் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.