முதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: 5 மணி நேரத்தில் தயாரான கருணாநிதி நினைவிடம்


முதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: 5 மணி நேரத்தில் தயாரான கருணாநிதி நினைவிடம்
x
தினத்தந்தி 9 Aug 2018 11:45 PM GMT (Updated: 2018-08-10T04:38:35+05:30)

சென்னையில் அண்ணா சமாதியின் அருகே 5 மணி நேரத்தில் கருணாநிதியின் சமாதியை பொதுப்பணித்துறையினர் அமைத்தனர். குழிக்குள் பேழையை இறக்க நாட்டிலேயே முதல் முறையாக நவீன கருவி பயன்படுத்தப்பட்டது.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் உடல் ராஜாஜி அரங்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த போது, எந்த இடத்தில் நல்லடக்கம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக மெரினாவில் உள்ள அண்ணா சமாதியின் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பணியை விரைவாக செயல்படுத்த தமிழக அரசு பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டதுடன், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.அமுதாவை பணியை மேற்பார்வையிடவும், ஒருங்கிணைப்பதற்காகவும் நியமித்தது.

பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் உத்தரவை ஏற்று, பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) மனோகரன், துணை தலைமை பொறியாளர் கே.பி.சத்தியமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் அண்ணா சமாதி இருக்கும் வளாகத்துக்கு 8 பொக்லைன் எந்திரங்கள் மற்றும் 11 டிப்பர் லாரிகள் மற்றும் 50 பொறியாளர்கள் மற்றும் 200 பணியாளர்களுடன் களம் இறங்கினார்கள்.

அண்ணா நினைவிட வளாகத்தில் எந்த இடத்தில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பது என்பதை தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தேர்வு செய்து அளித்தனர். அந்த இடத்தில் நினைவிடம் அமைக்க பொதுப்பணித்துறையும் ஒப்புக்கொண்டு பகல் 11.30 மணிக்கு பணியை தொடங்கினார்கள். 10 அடி நீளம், 6 அடி ஆழம், 7 அடி அகலத்தில் குழி தோண்டி கருணாநிதியின் உடல் வைப்பதற்காக அமைத்தனர்.

குழிக்கு உள்ளே தரைதளத்தில் கான்கிரீட்டும், பக்கவாட்டில் 10-க்கு ஒன்று என்ற அளவில் ஹாலோ பிளாக்ஸ் கற்களும் பதிக்கப்பட்டன. அத்துடன் முக்கிய விருந்தினர்களுக்காக பந்தல்கள் மற்றும் இருக்கைகளும் அமைக்கப்பட்டன.

கருணாநிதியின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழையை குழிக்குள் இறக்குவதற்காக இந்தியாவிலேயே முதல் முறையாக ‘ஹைட்ராலிக் மோட்டார் ஜாக்’ என்ற நவீன கருவி பயன்படுத்தப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை ஏற்று தி.மு.க. தலைவர் கருணாநிதிக்காக இந்த சவாலான பணியை 5 மணி நேரத்தில் அதாவது குறுகிய நேரத்தில் பணியை மின்னல் வேகத்தில் பொதுப்பணித்துறை சிறப்பாக முடித்து சாதனை படைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story