ஒரே ஆண்டில் 2-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை


ஒரே ஆண்டில் 2-வது முறையாக 120 அடியை எட்டியது மேட்டூர் அணை
x
தினத்தந்தி 11 Aug 2018 8:20 AM GMT (Updated: 2018-08-11T13:50:03+05:30)

ஒரே ஆண்டில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. #Metturdam

சென்னை,

தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதேபோல் கபினி அணையும் நிரம்பி இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையை கடந்து நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பால்  மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே ஆண்டியில் 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 

மேட்டூர் அணை வரலாற்றில் 40-வது முறையாக முழு கொள்ளளவை அணையின் நீர்மட்டம் எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நீர் திறப்பு மாலைக்குள் 1.30 லட்சம் கன அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கர்நாடகாவின் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 80 ஆயிரம் கனஅடி திறக்கப்படுவதால் 9 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story