விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விதிமுறைகள் அறிவிப்பு


விநாயகர் சதுர்த்தியையொட்டி அரசு விதிமுறைகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2018 7:46 PM GMT (Updated: 11 Aug 2018 7:46 PM GMT)

10 அடிக்கு மேல் சிலைகள் இருக்கக் கூடாது, விநாயகர் சிலைகளை மாட்டு வண்டியில் எடுத்துச் செல்ல கூடாது விவிநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விநாயகர் சிலைகள் வைப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தி பண்டிகை அடுத்த மாதம் (செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் இந்து அமைப்புகள், கோவில் நிர்வாகம் சார்பில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபாடு நடத்தி, பின்னர் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் வைப்பதற்கு தமிழக அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* விநாயகர் சிலைகளை வைத்து வழிபட விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர் அலுவலகத்திலும், பிற இடங்களில் வருவாய் கோட்ட அதிகாரி, உதவி கலெக்டரிடம் ஒரு மாதத்துக்கு முன்னதாக விண்ணப்பிக்கவேண்டும்.

அதே சமயத்தில் விநாயகர் சிலை வைக்கப்படும் இடத்தின் உரிமையாளர், பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்திடம் தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். இதேபோல சவுண்ட் சர்வீஸ் பயன்படுத்த லைசென்சு மற்றும் அனுமதிக்கான சான்று, தீ தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

மின்சாரம் பயன்படுத்துவதற்கான ஆதாரம் மற்றும் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்திடம் தற்காலிகமாக மின் இணைப்பு பெற்றதற்கான ஆதாரம் ஆகியவை அடங்கிய கடிதமும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

* பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் களி மண்ணால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். ‘பிளாஸ்டர் ஆப் பாரீஸ்’, பெயிண்ட் அடிக்கப்பட்டது என ரசாயன மாசு ஏற்படுத்தும் மூலப்பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்களை விநாயகர் சிலை வடிவமைப்பு செய்யும்போது சேர்க்கக்கூடாது. விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டவேண்டியதாக இருந்தால், தண்ணீரில் கரையும் தீங்கு ஏற்படுத்தாத இயற்கை சாயங்களை பயன்படுத்தலாம். ரசாயன வர்ணங்கள் தீட்டுவதற்கு கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.

* தற்காலிக கட்டுமானங்களில் எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மேலும் சுமுகமாக சென்று வருவதற்காக நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைக்க வேண்டும்.

* எளிதில் தீப்பற்றிக்கொள்ளும் பொருட்கள் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடத்தின் சுற்றுப்புறத்தில் இல்லாததையும், முதல் உதவி மற்றும் அவசர சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

* பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலை 10 அடிக்கு மேல் தாண்டக்கூடாது.

* பிற வழிபாட்டு தலங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அருகே பிரதிஷ்டை செய்வதை தவிர்க்க வேண்டும்.

* பூஜை செய்யும்போது காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் மட்டுமே சவுண்ட் ஆம்ப்ளிபையர் (மைக்) பயன்படுத்துவதக்கு உரிமம் வழங்கப்படும். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. பாக்ஸ் வடிவிலான ஒலிபெருக்கிகள் மட்டுமே பயன்படுத்தவேண்டும். ஒலி மாசு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விடவும் தாண்டக்கூடாது.

* விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்பவர்கள் மின்சாரம் திருட்டு உள்ளிட்ட எந்தவித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதை உறுதி செய்யவேண்டும்.

* விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யும் இடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள் சார்ந்த விளம்பர பதாகைகள் இருக்கக்கூடாது.

* விநாயகர் சிலைகள் பாதுகாப்புக்கு 2 தன்னார்வலர்களை பிரதிஷ்டை செய்பவர்கள் நியமிக்கவேண்டும். பிரதிஷ்டை செய்யும் விநாயகர் சிலைகள் ஒளிரும் வகையில் இருக்க வேண்டும். மின் தடை ஏற்படும் சமயத்தில், ஜெனரேட்டர் மூலம் இதற்கான ஏற்பாடுகளை செய்யவேண்டும்.

* வகுப்புவாத வெறுப்பை தூண்டும் வகையில் கோஷம் போடுவதோ, பிற மதத்தின் உணர்வுகளை புண்படுத்துவதோ எந்தவித சூழலிலும் அனுமதிக்கப்படமாட்டாது.

* விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்பவர்கள் பொது அமைதி, சமூக நல்லிணக்கம் கருதி வருவாய், போலீஸ், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் விதித்த விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவேண்டும்.

* தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துணை அதிகாரிகள் பாதுகாப்பு விதிகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை ஆராய்ந்து உறுதி செய்யவேண்டும்.

* மாவட்ட கலெக்டர்கள் போலீஸ் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகளோடு இணைந்து விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களை தேர்வு செய்யவேண்டும். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு என்று அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்ட இடங்களிலேயே கரைக்கவேண்டும்.

* பொது இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நிறுவிய நாளில் இருந்து 5 நாட்களுக்குள் கரைப்பதற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

* விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் 12 மணி நேரத்துக்கு முன்னதாகவே தொடங்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதையில் மசூதிகள், தேவாலயங்கள் இருந்தால், போலீசாரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட வழியிலேயே வாகனங்களில் வைத்து விநாயகர் சிலைகள் எடுத்துச்செல்லவேண்டும்.

* விநாயகர் சிலைகளை எடுத்துச்செல்வதற்கு மினி லாரி, டிராக்டர் மட்டுமே பயன்படுத்தவேண்டும். மாட்டு வண்டி, மூன்று சக்கர வாகனங்களில் எடுத்துச்செல்ல அனுமதி கிடையாது.

* மோட்டார் வாகன சட்டம் அளித்துள்ள விதிமுறைப்படியே வாகனத்தில் ஆட்கள் செல்வதற்கு, எடை அளவு எடுத்துச்செல்வதற்கு அனுமதிக்கப்படவேண்டும்.

* விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் இடங்கள், கரைக்கும் இடங்கள் மற்றும் ஊர்வலமாக செல்லும்போது பட்டாசுகள் வெடிக்கக் கூடாது.

* விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பூக்கள், துணிகள், அலங்கார பொருட் கள் எடுக்கப்படவேண்டும். மக்கும் பொருட்கள் தனியாகவும், மக்காத பொருட்கள் தனியாகவும் சேகரிக்கப்படும்.

* விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்கள் வேலியிடப்பட்டிருக்க வேண்டும். சிலைகள் எடுத்துச்செல்லப்படும் இடத்தில் தரையில் தடங்கள் அல்லது விரிப்புகள் முன்னதாகவே போட்டிருக்கவேண்டும்.

* கடற்கரைகள், நதி மற்றும் ஏரிகளில் என விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட இடங்களில் இருந்து அதன் மூலப்பொருட்கள் 48 மணி நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்படவேண்டும்.

* விநாயகர் சிலை கரைப்பு இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு முன்பு, கரைக்கும்போது மற்றும் கரைத்த பின்னர் என 3 நிலைகளில் தேவையான அளவு மாதிரிகளை எடுத்து தண்ணீர் பரிசோதனை செய்யவேண்டும். தண்ணீரின் தரத்தை அறிவதற்கான இந்த சோதனையை செய்யவேண்டும்.

* ஆணை வழங்கும் அதிகாரத்துக்கு எதிராக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றால் போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story