கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சி: பிறந்த குழந்தையை பார்க்க செல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர்


கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சி: பிறந்த குழந்தையை பார்க்க செல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர்
x
தினத்தந்தி 11 Aug 2018 10:30 PM GMT (Updated: 11 Aug 2018 8:03 PM GMT)

பிறந்த குழந்தையை பார்க்க செல்லாமல் கருணாநிதி அஞ்சலி நிகழ்ச்சியில் காயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் டிரைவரின் கடமை உணர்வை டாக்டர்கள் பாராட்டினர்.

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின்போது திடீரென கூட்டத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திக் (வயது 32) என்பவரும் ஈடுபட்டார்.உரிய நேரத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் பலர் உயிர்பிழைத்தனர்.

கார்த்திக் சென்னை தீவுத்திடல் அருகே உள்ள குடிசைபகுதியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா (27) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கார்த்திக் கடந்த 8-ந் தேதி அதிகாலை பணியில் இருந்தபோது சத்யாவுக்கு திடீரென பிரசவவலி ஏற்பட்டு கஸ்தூர்பா காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சற்று நேரத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்த தகவல் கார்த்திக்குக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவசர மருத்துவ உதவி தேவைக்காக அவருக்கு அங்கு சவாலான பணி இருந்ததால் மனைவியையும், பிறந்த குழந்தையையும் பார்க்க செல்லமுடியவில்லை. சமூக அக்கறை மற்றும் கடமை உணர்வு அவருக்கு இருந்ததால் மனிதநேயத்துடன் செயல்பட்டார்.

நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சரியான நேரத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தனர். இறுதியாக உயிரிழந்த ஒருவரை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினார். இரவு 11 மணிக்கு தன் குழந்தையை பார்க்க மருத்துவமனைக்கு சென்றார்.

சமூக அக்கறையுடன் பொதுநலன் கருதி கார்த்திக் பணியாற்றியதை அறிந்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவ மனையின் தொடர்பு அதிகாரி டாக்டர் வீ.ஆனந்தகுமார் உள்பட டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டினர். இதுகுறித்து கார்த்திக் கூறியதாவது:-

நான் 16 வருடங்களாக ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறேன். பிரவச வலியால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட எனது மனைவி எனக்கு போன் செய்து, நீங்கள் வரமுடியுமா? என்று கேட்டார். எனது சூழ்நிலையை மனைவியிடம் கூறியதும் அவளும் புரிந்துகொண்டார். குழந்தையையும், மனைவியையும் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் முக்கியமான பொறுப்பு இருந்ததால் செல்லவில்லை.

குழந்தை பிறந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது போலவே காயமடைந்தவர்களை காப்பாற்றியதும் மகிழ்ச்சியை தருகிறது. ஏற்கனவே என் திறமையையும், உழைப்பையும் ஊக்குவிக்கும் வகையில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பாராட்டியதோடு, முதல்- அமைச்சரிடம் விருதும் பெறவைத்தது என்னை மேலும் உற்சாகப்படுத்தி பணியில் ஈடுபடவைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பல்நோக்கு மருத்துவமனை தொடர்பு அதிகாரி டாக்டர் வீ.ஆனந்தகுமார் கூறும்போது, “எங்கள் மருத்துவமனையில் நடைபெறும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு நம்பத்தகுந்த ஆம்புலன்ஸ் டிரைவராக கார்த்திக் இருந்து வருகிறார். சமீபத்தில் குளோபல் மருத்துவமனையில் இருந்து இங்கு 20 நிமிடங்களில் இதயத்தை கொண்டுவந்து சாதனை படைத்தவர். இதற்காக அவருக்கு தமிழக அரசு பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளது. தனக்கு குழந்தை பிறந்ததையும் பார்க்க செல்லாமல், அர்ப்பணிப்போடு பணியாற்றிய அவருக்கு சுதந்திர தினத்தன்று பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்க உள்ளோம்” என்றார்.

Next Story