புழல், கண்ணிகைபேர் ஏரிகளில் மணல் அள்ள தடை ஐகோர்ட்டு உத்தரவு


புழல், கண்ணிகைபேர் ஏரிகளில் மணல் அள்ள தடை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2018 10:00 PM GMT (Updated: 11 Aug 2018 8:28 PM GMT)

புழல், கண்ணிகைபேர் ஏரிகளில் மணல் அள்ள தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை சேர்ந்தவர் வக்கீல் சி.வெங்கடபதி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

செங்குன்றம், நரவரிக்குப்பம் கிராமத்தில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், விதிகளை மீறி இங்கு 20 அடி ஆழத்துக்கு குழிபறித்து மணல் எடுக்கின்றனர். நாள் ஒன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளுகின்றனர்.

இந்த இடத்தில் மணல் அள்ள அனுமதியின் அடிப்படையில், தற்போது புழல் ஏரியில் மணல் அள்ளுகின்றனர். இதற்காக புழல் ஏரியில் வடமேற்கு பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீரை, ராட்சத மோட்டார் மூலம் வெளி யேற்றிவிட்டு மணலை அள்ளுகின்றனர்.

இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் ஏராளமான புகார்களை உள்ளூர் மக்கள் கொடுத்தனர். போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், மணல் கொள்ளையர்கள் மீது இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேபோல, கண்ணிகைபேர் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்தும் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். இங்கு அள்ளப்படும் மணல், பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஏரிகளில் இருந்து எடுக்கப்படும் மணல், திருவள்ளூர் மாவட்டம், நல்லூர் பஞ்சாயத்தில் உள்ள அத்தன்தாங்கல் கிராமத்தில் குவித்து வைத்துள்ளனர்.

இந்த சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர், திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு, மாதவரம் துணை கமிஷனர், சோழவரம், செங்குன்றம், பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், பொன்னேரி, ஊத்துக்கோட்டை தாசில்தார்கள் ஆகியோர் நன்கு தெரிந்து இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, இதுகுறித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.புருஷோத்தமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதிகள், ‘மழை காலங்களில், ஏரிகளில் மணல் அள்ள அதிகாரிகள் எதற்காக அனுமதி வழங்குகின்றனர்? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர், ‘மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை, புழல் மற்றும் கண்ணிகைபேர் ஏரிகளில் இருந்து சவுடு, கிராவல், வண்டல் என்று எந்த வகையான மணலும் அள்ளக்கூடாது. இந்த மணலை அள்ளவும், லாரி உள்ளிட்ட வாகனங்களில் எடுத்துச்செல்லவும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதிக்ககூடாது’ என்று உத்தரவிட்டனர்.

மேலும், ‘இந்த வழக்கை தொடர்ந்த வெங்கடபதிக்கு மிரட்டல் இருப்பதாக, அவரது வக்கீல் கூறுவதால், மனுதாரருக்கு முழு பாதுகாப்பை செங்குன்றம் இன்ஸ்பெக்டர் வழங்கவேண்டும். விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story