9 சட்டக்கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்களை நியமிக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


9 சட்டக்கல்லூரிகளுக்கு நிரந்தர முதல்வர்களை நியமிக்கவேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2018 11:45 PM GMT (Updated: 11 Aug 2018 9:06 PM GMT)

தமிழகத்தில் உள்ள 9 சட்டக்கல்லூரிகளுக்கும் நிரந்தர முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் இருந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி பல ஆண்டுகளாக செயல்பட்டது. இந்த கல்லூரியை இரண்டாக பிரித்து, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டது.

அதன்படி, 5 ஆண்டு சட்டப்படிப்பை காஞ்சீபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்திலும், 3 ஆண்டு சட்டப்படிப்பை திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப் பெரும்புதூரிலும் தொடங்கப்பட்டுள்ளது.

கல்லூரியை இடம் மாற்றுவதை எதிர்த்தும், காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது குறித்தும் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:-

2 சட்டக்கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை 2 வாரத்தில் செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக விடுதி மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.

ஒழுங்கீனமாக செயல்படும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முழுஅதிகாரம் அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்லூரிகளில் ஒரு சப்இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் கொண்ட சோதனைச் சாவடியை அமைக்கவேண்டும். கல்லூரிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சென்னையில் இருந்து இந்த 2 கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவர்களுக்கு இந்தாண்டு மட்டும் தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும்.

அதுபோல தமிழகம் முழுவதும் உள்ள 11 அரசு சட்டக்கல்லூரிகளில் 2 கல்லூரிகளில் மட்டுமே நிரந்தர முதல்வர்கள் உள்ளனர். எனவே, 9 கல்லூரிகளிலும் உடனடியாக நிரந்தர முதல்வர்கள் மற்றும் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story