மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.33 லட்சம் கனஅடியாக குறைந்தது


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.33 லட்சம் கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 12 Aug 2018 3:36 AM GMT (Updated: 2018-08-12T09:06:52+05:30)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.33 லட்சம் கனஅடியாக இன்று குறைந்துள்ளது.

சேலம்,

தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில், நேற்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 1.25 லட்சம் கனஅடியில் இருந்து 1.13 லட்சம் கனஅடியாக இன்று குறைக்கப்பட்டு உள்ளது.  கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 120.20 அடியாக உள்ளது.  இதேபோன்று அணையில் நீர் இருப்பு 93.79 டி.எம்.சி.யாக உள்ளது.  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.43 லட்சம் கனஅடியில் இருந்து 1,33,914 கனஅடியாக குறைந்துள்ளது.

Next Story