கருணாநிதி சமாதியில் மு.க.முத்து அஞ்சலி தந்தையின் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார்


கருணாநிதி சமாதியில் மு.க.முத்து அஞ்சலி தந்தையின் புகைப்படத்தை பார்த்து கதறி அழுதார்
x
தினத்தந்தி 12 Aug 2018 7:27 PM GMT (Updated: 12 Aug 2018 7:27 PM GMT)

கருணாநிதி சமாதியில் அவருடைய மகன் மு.க.முத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்து அவர் கதறி அழுதார்.

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். கருணாநிதியின் சமாதியில், தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் வடிவிலும், கொடி வடிவிலும் கருப்பு, சிகப்பு வண்ண மலர்களால் நேற்று அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் சமாதியை சுற்றிலும் துருப்பிடிக்காத இரும்புகள் (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்) மூலம் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

விடுமுறை தினம் என்பதால் நேற்று கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களின் கூட்டம் அலைமோதியது. காலை முதலே சமாதிக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் அண்ணா நினைவிட வளாகத்தில் எங்கு பார்த்தாலும் அஞ்சலி செலுத்த வந்தவர்களின் தலைகளாகவே காட்சியளித்தது. நீண்ட வரிசையில் காத்து நின்று மலர்களை தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த போதிய அளவு போலீசார் நிறுத்தப்படவில்லை. தி.மு.க.வினரே கூட்டத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் தேவையில்லாத கூச்சல், குழப்பம் நிலவியது. சில தருணங்களில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கருணாநிதி சமாதிக்கு அவருடைய மகன் மு.க.முத்து அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று வந்தார். உடல்நலம் குன்றியிருந்ததால் சிலர் அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். கருணாநிதி சமாதியில் மு.க.முத்து மலர் தூவியும், மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் சிறிது நேரம் கருணாநிதியின் உருவப்படத்தை பார்த்தவாறு கண் கலங்கியப்படி நின்றார். சோகம் தொற்றிக்கொண்ட நிலையில், அவரை அறியாமலேயே மு.க.முத்து கதறி அழுதார். இது அருகே நின்றவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

கனிமொழி எம்.பி. தலைமையில் ‘டிசம்பர்-3’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தீபக் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கருணாநிதி சமாதியில் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் ஆசிரியர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினர். சவுகார்பேட்டையை சேர்ந்த பள்ளி மாணவிகள் ரோஜா பூவுடன் வந்து அஞ்சலி செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா சரத்குமார் தலைமையில் நிர்வாகிகள் கருணாநிதி சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன், நக்கீரன் கோபால், கவிஞர் பா.விஜய், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த மூத்த நிர்வாகி தங்கதமிழ்ச்செல்வன், நடிகை லதா, நடிகர் தியாகு, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதா விஜயக் குமார் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.


Next Story