சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் 449 கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து


சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் 449 கோவில்களில் சிறப்பு வழிபாடு, பொது விருந்து
x
தினத்தந்தி 12 Aug 2018 11:00 PM GMT (Updated: 12 Aug 2018 9:30 PM GMT)

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 449 கோவில்களில் சிறப்பு வழிபாடுடன் பொது விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

சென்னை,

சுதந்திர தினத்தையொட்டி வழிபாடு, இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பு திட்டத்தின்படி தமிழகம் முழுவதும் உள்ள நிதி வசதி மிக்க கோவில்களில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வரும் 15-ந்தேதி (புதன்கிழமை) அன்று கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி நடக்கிறது.

நடப்பாண்டு 449 கோவில்களில் அனைத்து சமுதாய மக்களும் பங்கு பெறும் வகையில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்பட உள்ளது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு, கோவில்களில் காணிக்கையாகப் பெறப்பட்டு உபரியாக உள்ள பருத்தி வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டங்களில் உள்ள கோவில்களில் மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

சென்னை பெருநகர பகுதிகளில் நடைபெறும் இச்சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சிகளில் சபாநாயகர், முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். குறிப்பாக திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோவிலில் சட்டசபை சபாநாயகர் ப.தனபால், கே.கே.நகர். பி.டி.ராஜன் பூங்கா சாலையில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்கிறார்கள். இதேபோன்று சென்னையில் உள்ள பிற கோவில்களில் அமைச்சர்கள் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story