கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு


கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் ரஜினிகாந்த் ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 14 Aug 2018 12:15 AM GMT (Updated: 13 Aug 2018 10:01 PM GMT)

கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கியதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராடி இருப்பேன் என்று ரஜினிகாந்த் ஆவேசமாக பேசினார்.

சென்னை, 

தமிழ் திரையுலகம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் கூட்டம் நேற்று நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கருணாநிதி உருப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இதில் பங்கேற்றார்.

இரங்கல் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

“கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. கலைஞர் தமிழகத்துக்கு பெரிய அடையாளமாக இருந்தார். இனிமேல் மற்ற மாநிலங்களில் உள்ள பெரிய தலைவர்கள் தமிழ் நாட்டுக்கு வந்து சந்தித்துவிட்டு போக நினைக்கும் அளவுக்கு தலைவர்கள் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

45 வயதில் கழகத்துக்கு தலைமை ஏற்று எத்தனையோ சோதனைகள், சூழ்ச்சிகள், துரோகங்கள் மத்தியில் 50 ஆண்டுகள் கழகத்தை கட்டிகாப்பாற்றினார். அரசியல் களத்தில் பழைய ஆட்களாகட்டும், புதியவர்களாகட்டும் அவர்களிடம் முதலில் என்னிடம் நட்பு கொள் அல்லது என்னை எதிர்கொள் அப்போதுதான் தமிழ் நாட்டில் அரசியல் செய்ய முடியும் என்று அரசியல் சதுரங்கத்தில் புகுந்து விளையாடினார்.

அவரால் அரசியலுக்கு வந்தவர்கள் பல லட்சம் பேர். முழுநேர அரசியலுக்கு வந்தவர்கள் பல ஆயிரம் பேர். தலைவர் ஆனவர்கள் பல நூறு பேர்.

யாரும் தவறாக நினைத்துக்கொள்ளக்கூடாது. அ.தி.மு.க. ஆண்டு விழாவுக்கு புரட்சித்தலைவர் போட்டோ வைக்கிறார்கள். பக்கத்திலேயே கலைஞர் புகைப்படமும் வைக்க வேண்டும். ஏன் என்றால் அ.தி.மு.க. உருவானது டாக்டர் கலைஞரால்.

அவரை கட்சியில் இருந்து தூக்குவதற்கு பின்னால் யார் யார் இருந்தார்கள். என்ன சூழ்ச்சிகள் இருந்தன. என்பதெல்லாம் வரலாறு தெரிந்தவர்களுக்கு தெரியும். எத்தனை வஞ்சனைகள்? அதையெல்லாம் தாண்டி அவரது உடன்பிறப்புகளுக்காக வாழ்ந்தார். இலக்கியத்துக்கு அவர் செய்த சாதனைகள் சாதாரணமானது அல்ல.

இருட்டில் இருந்து சரித்திர நாயகர்களான பல்லவர், சோழர், பாண்டியர், சிற்றரசர்களையெல்லாம் அவரது எழுத்தாலும், சொல்லாலும் பாமரனில் இருந்து பண்டிதர் வரைக்கும் கொண்டுபோய் சேர்த்தவர் கலைஞர். நடிகராக இருந்த எம்.ஜி.ஆரை ஸ்டாராக்கியது மலைக்கள்ளன் படம். சிவாஜியை சூப்பர் ஸ்டாராக்கியதும் கலைஞரின் பராசக்திதான்.

கலைஞர் இழப்பை என்னால் தாங்க முடியாமல் கோபாலபுரத்துக்கு சென்றேன். அங்கு பார்க்க முடியாமல் திரும்பி விட்டேன். மறுநாள் காலை 6 மணிக்கு ராஜாஜி ஹாலில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி பார்த்தபோது சில ஆயிரம் பேர் இருந்ததை பார்த்து வருந்தினேன். அவரது உடன்பிறப்புகள் எங்கே? தமிழ் மக்களுக்காக எவ்வளவோ உழைத்தவருக்கு இவ்வளவுதானா கூட்டம் என்று கோபம் வந்தது.

வீட்டுக்கு சென்று படுத்துக்கொண்டேன். அதன்பிறகு எழுந்து டி.வி.யை பார்த்தபோது அலைஅலையாக கூட்டம். கட்டுக் கடங்காத கூட்டம். அந்த கூட்டத்தை பார்த்து சபாஷ். தகுந்த மனிதருக்கு தகுந்த மரியாதை. தமிழர்கள் தமிழர்கள்தான். மறக்கமாட்டார்கள் அவரை என்று நினைத்து எனது கண்ணில் கண்ணீர் வந்தது.

அவரது இறுதி சடங்கில் இந்திய தலைவர்கள் அனைவரும் வந்து இருந்தார்கள்.

21 குண்டுகள் முழங்க முப்படை தலைவர்கள் மரியாதை அளித்தனர். அதில் ஒரே ஒரு குறை. கவர்னரில் இருந்து எல்லா மாநில முதல்-அமைச்சர்கள் வந்தனர். பிரதமர் வந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2, 3 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டின் முதல் பிரஜை முதல்-அமைச்சர் அங்கு வரவேண்டாமா? மந்திரிசபையே அங்கு இருக்கக்கூடாதா? இதை பார்த்த மக்கள் என்ன நினைப்பார்கள்.

நீங்களெல்லாம் என்ன எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? அப்போது ஜாம்பவான்கள் இருந்தார்கள். இப்போது இல்லை.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது. மேல்முறையீடுக்கு போகவில்லை. மேல்முறையீடுக்கு போய் இருந்தால் நானே போராட்டத்தில் இறங்கி இருப்பேன்.

இறுதி சடங்கில் ஸ்டாலின் குழந்தை மாதிரி கண்ணீர் விட்டதை என்னால் தாங்கமுடியவில்லை. உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். ஆண்டவன் இருக்கிறான். வருத்தப்பட வேண்டாம்.”

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால், நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் ராதாரவி, ஜீவா, விக்ரம்பிரபு, நடிகைகள் குஷ்பு, சுகாசினி, ஸ்ரீப்ரியா, அம்பிகா, தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, கேயார், ஐசரி கணேஷ், கதிரேசன், ஏ.எல்.அழகப்பன், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, விக்ரமன் மற்றும் ஜாகுவார் தங்கம், பன்னீர்செல்வம், அருள்பதி, ஆனந்தா எல்.சுரேஷ், கே.ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

Next Story